Showing posts with label அது ஒரு காலம்(Nostalgia). Show all posts
Showing posts with label அது ஒரு காலம்(Nostalgia). Show all posts

Saturday, October 29, 2011

நினைவுக் காவிரியில் ஒரு பயணம்

நாஸ்டால்ஜியா (மலரும் நினைவுகள்) என்பது, ஒரு காரணமும் இன்றி, பரணில் என்றோ பத்திரப்படுத்திய தேய்ந்து போன கிராமஃபோன் தகடு போன்றது! அதிலிருந்து வெளிப்படும் குரல் கரகரப்பாக இருப்பினும், அந்த அடிப்படை இசை நினைவுத் தெளிவாக, மனதைக் கவ்வி ரீங்காரமிட வைக்க வல்லது.

விரைவில் விற்கப்படவிருந்த, பல காலமாக காலியாக இருந்த, பள்ளிக்காலத்தில் வாழ்ந்த பழைய வீட்டுக்குள் நுழைகையில் அன்னியோன்னியமான ஒரு அன்னியன் போல் உணர்ந்தேன். மஞ்சள் படிந்த முன்பக்க சுண்ணாம்பு சுவற்றில் நான் நட்டு நீர் ஊற்றி வளர்த்த புளிய மரத்தின் நிழல் நீண்டிருந்தது, சிறுவயது மழைக்கால இரவுகளில் பல கரங்கள் கொண்ட ஒரு கரும்பேய் போல அம்மரம் காட்சியளித்து பயமுறுத்தியது இப்போது ஒரு புன்முறுவலை வரவழைத்தது.

வழக்கமாக வீட்டுக்கு வெள்ளையடித்த மாடசாமி கூட அறியாத சில ரகசிய இடங்களில் இருந்த பழைய கவிதைக் கிறுக்கல்களின் நாயகி நினைவில் நிழலாடினாள். பழைய புத்தகங்கள் இருந்த அறையில் ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டுகையில், கறுப்பு வெள்ளை புகைப்படத்தில், இரட்டைப் பின்னலுடன், மையிட்ட கண்களுடன், கன்னங்குழித்த வெட்கப் புன்னகையுடன் அவளைப் பார்க்கையில், அப்போது காற்றில் தவழ்ந்த மல்லிகை மணமும், கலகல சிரிப்புச் சத்தமும், இப்போது நனவு போலவே!

அம்மண அறைகளில் அலைகையில் அன்று குடும்ப புகைப்படங்கள் தொங்கிய வெற்றுச் சதுரங்கள் இன்று எண்ண வட்டங்களைத் தோற்றுவித்தன. ஓடு வேய்ந்த கூரை ஓட்டைகளின் நடுவில் மரச்சட்டங்கள், வானத்துக்கு எதிரான சவாலில் வென்று ஜுராஸிக் எலும்புகள் போல காட்சியளித்தன. உடைந்த செம்மண் தரையில் ஒற்றை கிளப் ஏஸ் சீட்டு காலை நெருடியபோது வீட்டு ரேழியில் டிரம்ப்ஸ் (Trumps) சீட்டாட்டம் ஆடிய பள்ளி நண்பர்கள் (மொட்டை, குள்ளிபா, ஜொல்லு, சோடா, உசிலை, துலுக்ஸ்) குறித்த பல ஞாபகங்கள் ஒரு சுனாமி போல உணர்வில் மோதின.

குளிர்ச்சியாக இருந்த கூடத்து மரத்தூண்களை கட்டிக்கொண்டு கடைசி முறையாக வாசனை பார்த்தேன். ஆறடி உயர அப்பா உறுதியாக தூணில் கையைப் பதித்திருக்க, அவரது புஜத்தில் தொங்கி ஊஞ்சலாடிய நான்காம் வயது ஞாபகமும், “இன்னொரு காபி குடிக்கறியாடா?” (3 வயதிலேயே பாலுக்கு பதில் காபி குடிக்க ஆரம்பித்து விட்ட முதல் ஆள் நானாகத் தான் இருப்பேன்!) என்ற அம்மாவின் வாஞ்சையான குரலும்,  சுற்றம் சூழ வாழ்ந்த அந்த வீடெங்கும் காலை வேளைகளில் தவழ்ந்த, அம்மாவின் பிரத்யேக காபி மணமும் இப்போது நினைவுக்கு வந்து கண்ணில் நீர் திரையிட்டது. இந்த வீடும் இப்போது இறந்து கொண்டு தான் இருந்தது!

பின் பக்கம் இருந்த சிறிய தோட்டத்தில் செடி கொடிகள் கவனிப்பார் அற்று கண்டபடி வளர்ந்திருந்தன, குப்பைக்கூளமாக இருந்த முற்றத்தின் நடுவில் இருந்த துளசி மாடம் மட்டும் பளிச்சென சுத்தமாக இருந்தது ஆச்சரியத்தை வரவழைத்தது. ஒரு துளசி இலையை வாயிலிட்டு மெல்லுகையில், ஏனோ மனதுக்கு மிக இதமாக இருந்தது. துளசி மாடத்தின் கூண்டிலிருந்த அகல் விளக்கு எண்ணெய்ப் பசை யாரோ விளக்கேற்றியதற்கும், மாடத்தின் சமீபத்திய தூய்மைக்கும் அத்தாட்சியாக இருந்தது.

சட்டைப்பையில் ஐஃபோன் கிணுகிணுத்தது. வீட்டை விலைக்கு வாங்கவிருந்த பில்டரின் அழைப்பு. நான் பதிலளிக்கவில்லை!

அன்புடன்
பாலா

Sunday, September 06, 2009

549. டகிள்பாட்சா "பழம்பெரும்" கவிதைகள் - விருந்தினர் இடுகை

டகிள் பாட்சாவின் அறிமுகம் சமீபத்தில் டிவிட்டர் மூலம் கிட்டியது. சுவாரசியமான மனிதர். நகைச்சுவை உணர்வு மிக்கவர். அந்தக்காலத்து பத்திரிகையாளர். இப்போது கணினித் துறையில் பணி புரிகிறார். சரளமான தமிழ். தமிழ் வலைப்பதிவுலகில் டோண்டு ராகவன் போல ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கிறேன். பதிவெழுத நேரம் கண்டுபிடிப்பது அவர் சாமர்த்தியம் :)


அவர் 80களில் எழுதிய 4 (பழைய வாசனை அடிக்கும்!) கவிதைகளை தன் ஞாபகத்திலிருந்தே எழுதி எனக்கு அனுப்பினார்.  வாசிக்கையில், இக்காலச் சூழலில் அக்கவிதைகள் "வித்தியாசமாக"த் தோன்றின! வாசிக்கும் இளைஞர்களுக்கு, இவை சிரிப்பை வரவழைக்கலாம்! ஆனால், 25 வருடங்கள் முன்பு வந்த ஆ.விகடனையும், குமுதத்தையும், சாவியையும், இதயம் பேசுகிறதையும் ஞாபகப்படுத்தி, எனக்கு நாஸ்டால்ஜியாவை வரவழைத்த கவிதைகள் இவை :)


டகிள் GCTயில் Engineering படித்துக்கொண்டிருந்த போது (நான் படித்துக் கொண்டிருந்தபோது தான், டகிள் எனக்கு ஒரு வருடம் ஜூனியர், காலேஜில் மட்டும்!) ஒரு மாணவி ஏகப்பட்ட புலம்பலாய் ஆண் வர்க்கத்தையே தாக்கி காலேஜ் தமிழ் மன்ற notice board-ல் 'இதய சோகம்' என்று ஒரு கவிதை எழுதியிருந்தாள். 'ஆண்கள் மோசக்காரர்கள், கயவர்கள், காதலித்து ஏமாற்றி நெஞ்சில் மிதித்துவிட்டு செல்பவர்கள்' என்கிற ரீதியில் போனது கவிதை. பெண்களிடம் பெரிய வரவேற்பு. நம்ம டகிள் ஒரு பதில் கவிதை எழுதி தமிழ் மன்றத் தலைவரிடம் கொடுத்தார். அந்த professorம் அதை படித்து ரசித்து Notice Boardல் அதை publish செய்தார். அந்தக் காலத்தில் மாணவர்களும் மற்ற professorகளும் மிகக் கொண்டாடிய அந்த கவிதை கீழே:


அந்த "இதய சோகம்" எழுதிய பெண் கவிஞர், இப்போது பெரிய லெவலில் கலக்கிக் கொண்டிருக்கிறார், அவர் யார் என்பது இடுகையின் முடிவில் !!

டகிள் கவிதை 1 - இதய சோகத்திற்கு ஆறுதல்

காதலில் தோல்வியுற்று
கலங்கியே நிற்கும் பெண்ணே!
காதலென்பெதுவென் தோழி?
பூதமோ? பேயோ? இல்லை;
'சூ'வென விரட்டின் ஓடும்
'வா'வென அழைக்கின் வாலை
குழைக்கின்ற நாய்தான் காதல்!
காளையர் கயவர்தானா?
கண்டிப்பாய் இல்லை! இல்லை!
கன்னியருடனே நின்றால்
காமுகன் என்றா அர்த்தம்?
கண்டிப்பாய் இல்லை! இல்லை!
ஆண்மகன் ஒருவன் வந்து
அன்புடன் பேசும்போது
அதன் பெயர் காதல்தானா?
பேதைகள் என்றே உம்மை
சொன்னதும் சரிதான் போலும்!
ஆணெனப் பெண்னெனப் பார்த்தால்
காதல்தான் விளையும் பெண்ணே!
லட்சுமி என்பது ஆத்மா
லக்ஷ்மணன் என்பதும் ஆத்மா
கண்ணகி என்பதும் ஆத்மா
கருப்பனும் ஆத்மாதானே!
இப்படிப் பார்க்கும்போது
காதலா மனதில் தோன்றும்;
கருணையும் அன்புமே மிஞ்சும்!
இந்தியா வளரும் நாடு
இதிலென்ன காதல் இப்போ?
வளர்ச்சியை அழிக்கும் காதல்
வாழ்க்கையை கனவில் மூழ்க்கும்;
தோழமை வலிமைக் குன்று!
நட்புதான் என்றும் நன்று;
காதலைக் களைந்தே வாழ்வில்
தோழமை புரிவோம் வாரீர்

டகிள் கவிதை 2 - அறிவுச்சரிவு

கண்ட கண்ட
புத்தகங்களைப் படி!
ஆறு வித்யாசங்கள் பார்;
வழவழவென்றிருப்பது
முட்டையா! மொட்டையா?
அறிவுப் போட்டியில்
ஆர்வமாய் பங்கு கொள்;
ஆயிரம் ரூபாய்
கிடைத்தாலும் கிடைக்கும்!
"இலக்கியமா?" தூக்கி
குப்பையில் போடு!
"எந்த நடிகைக்கு
கன்னத்தில் குழி விழும்?
அடடா!
இதுதாம்பா இண்ட்ரஸ்டிங்....
"இந்தியாவில் தொழிற் புரட்சி!"
தலைப்பைப் பார்த்ததுமே
கொட்டாவி விட்டு
பக்கத்தைத் திருப்பி
சிட்டி எண்டர்டைன்மெண்டை
தேடு!
நல்லதாய்
மசாலா படம் வந்திருந்தால்
நாலு மணி நேரம்
வெய்யிலில் நின்று
வியர்வை வழிய
டிக்கட் வாங்கி
விஸிலடித்தபடி பார்த்து விட்டு
வெளியே வந்து புகை விடலாம்!
வருங்கால இந்தியா
நம் கைகளில்தானாம்
ஜாக்கிரதை!
கைகளை இறுக மூடு!
இந்தியா மீது
வெளிச்சம் பட்டுத்
தொலைத்து விடப்போகிறது!

டகிள் கவிதை 3 - பார்ட் டைம் B.E

நெஞ்சிலே துணிவிருந்தால்
எஞ்சினீரிங் படிக்கப் போ!
முடிந்தால் Part Timeல் படி!
அலுப்பூட்டும் office வேலைகள் நடுவே
கண்டதை படித்து
மண்டையை குழப்பலாம்!
இரவெல்லாம் கண்விழித்துப்
படித்து
தூக்கத்தில் பரீட்சை எழுதி
ரிஸல்ட் வரும் வரைக்கும்
துக்கத்தில் மிதக்கலாம்!
பின்னர்
போனதை நினைத்து கொஞ்சம்
மெலிதாய் அழுது விட்டு
தொலை தூரத்தில் தெரிவதாய்
நாம்
கற்பனை செய்து கொண்ட
வளமான எதிர்காலம்
அருகினில் வரும் வரை
அவஸ்தைப் படலாம்!
நெஞ்சத்து தெம்பனைத்தும்
தீர்ந்த பின்னர்
டிகிரி வாங்கின கையோடு
பென்ஷனையும் வாங்கலாம்
நெஞ்சிலே துணிவிருந்தால்
Part Time B.E. படிக்கப் போ!

டகிள் கவிதை 4 - கனவு ஜீவிதம்

வசிப்பதற்கு பங்களா
நாலு கார்
ஏஸி ரூம்
சொன்னதை முடித்திட
சுற்றிலும் வேலையாள்
பவுடர் ஸ்நோ
பான் கேக்
பகட்டாய் கட்டிட
Only Vimal
கழுத்திலே நாளெலாம்
பத்து பவுன் சங்கிலி
வைரத்தில் அட்டிகை
விடியு மட்டும்
வீடியோவில் படம்
அன்புடன் கணவன்.....
ஆசைகள் எத்தனை ??
ஏண்டி சனியனே!
நான் பெத்த குரங்கே!
தலையை அசைக்காதே!
உன் தகப்பன் வருவதற்குள்
பின்னி முடிக்கனும்
உன்
கூந்தலை மட்டுமல்ல
என்
கற்பனைகளையும்தான்..



டகிள் எழுதிய (இடுகையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட) "இதய சோகத்திற்கு ஆறுதல்" கவிதைக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த அந்த பெண் கவியின் பெயர் டகிளுக்கு ஞாபகமில்லை!


சமீபத்தில் டகிளிடம் நான் தொலைபேசிக் கொண்டிருந்தபோது, "அந்த பெண் கவி யார் தெரியுமா? திரைத்துறையில் பிரகாசிக்கும் நம்ம கவிஞர் தாமரை தான். அவர் என்னுடைய பேட்ச் தான், GCTயில்"". என்றேன். "டகிளுக்கே டகிளா?" என்றார் :) "இல்லை, அது தாமரை தான். அப்போதே நிறைய கவிதைகள்/கட்டுரைகள் எழுதுவார்" என்றேன்.


தாமரை அப்போதே பெண்ணியவாதக் கருத்துகளை தைரியமாகப் பேசுவார். மெக்கானிகல் Engg. வகுப்பில் அவர் ஒருவர் தான் பெண்!


புதிதாக தமிழில் வலை பதிய வந்துள்ள டகிள்பாட்சாவை வாசகர்/நண்பர் சார்பில் வரவேற்கிறேன். அவர் நிறைய எழுத வாழ்த்துங்கள், உற்சாகப்படுத்துங்கள்!


எ.அ.பாலா

Saturday, January 24, 2009

514. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

படங்களின் மீது சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்!




Saturday, January 17, 2009

509. குட்டி ராட்சசியின் MS பெயிண்ட் ஓவியங்கள்!

கைவண்ணத்தின் முழுமையான பலனை அனுபவிக்க, படத்தை கிளிக்கி, பெரிதாக்கிப் பார்க்கலாம் :-)

MAGIC SHOW:



NO IDEA:



DAY & NIGHT:



BRIGHT HOUSE:



DARK HOUSE:



WHALE RIDE:



NO SMOKING

Thursday, July 24, 2008

449. புராதானச் சென்னையின் கட்டுப்பாடற்ற பேருந்துப் பயணங்கள்!

ஜே.எஸ்.ராகவன் என்பவர் எழுதி, சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான இந்த "மலரும் நினைவுகள்" கட்டுரையை (இயன்றவரை நகைச்சுவைக்கு பங்கம் ஏற்படாதவாறு!) தமிழ்ப்படுத்தியிருக்கிறேன்.
********************
இரண்டாம் உலகப்போர் முடிவில், நிலக்கரிக்கு மாற்றாக பெட்ரோல் எரிபொருளாக பயன்படத் துவங்கிய காலத்தில், பூந்தமல்லிக்கும் பிராட்வேக்கும் இடையே, நெரிசல் இல்லாத சாலைகளில் பறந்த அந்த தனியார் பேருந்துகள் இன்னும் என் ஞாபகத்தில் உள்ளன. ஆங்கிலேயக் கொலையால் 'பூனமல்லே' என்று திரிந்த பூவிருந்தவல்லியைப் பற்றி பேசும்போது, அப்போது அங்கு அமோகமாக வளர்ந்த வெண்பனி நிற மல்லிப்பூவின் வாசம் (என்னையொத்த வயதானவர்களின்) நினைவில் வீசுவதை தவிர்க்க இயலாது!

அக்காலத்தில் பூந்தமல்லி டெர்மினஸில் பேருந்து புறப்படுவதை விசிலடித்து அறிவிக்க ஒரு நேரக் காப்பாளர் (Time Keeper) இருந்தார். ஆனால் ஓட்டுனரோ அவரது விசிலை கண்டு கொள்ளாமல், பேருந்தில் பயணிகள் ஓரளவு நிறைந்த பின்னர் தான் பேருந்தைத் துவக்குவது வழக்கம்! அப்பேருந்துகளின் நடத்துனர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தனர்! சிலர் உருண்டையாகவும், சிலர் 'தொள தொளா' சட்டை / கால்சராயுடனும், இன்னும் சிலர் அழகாக நறுக்கப்பட்ட பென்சில் மீசையுடனும் பார்க்க காமெடியாக இருப்பர் :) அவர்களில் என்னைக் கவர்ந்தவர், வெண்மையான முகத்தில் இங்க் அடித்தது போல தெரியும் ஹிட்லர் மீசையுடன் காணப்பட்ட பழனி என்பவர்.

பெரும்பாலான பயணிகளுடன் பழனிக்கு நல்ல பழக்கம் இருந்ததால், அவர்கள் பட்டணம் செல்வது குறித்து ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவதை பழனி வழக்கமாகக் கொண்டிருந்தார். மவுண்ட் ரோடில் இருந்த ஹிக்கின்ஸ்பாதம் புத்தகக் கடைக்கு என்னுடன் பயணித்த எனது தந்தையாருக்கு, பழனியிடமிருந்து டிக்கெட் பெறுவதில் துளியும் தயக்கம் இருந்ததில்லை. காரணம்: நடத்துனர்களில் பழனி ஒருவர் தான் டிக்கெடைக் கிழிக்க விரலை எச்சில்படுத்துவதில்லை:)

செயிண்ட் தாமஸ் மவுண்டுக்கு அருகில் இருந்த பட் ரோடு நிறுத்தம் வந்தவுடன், நான் எனது கண்களையும், காதுகளையும் கூராக்கிக் கொள்வேன்! அக்காலத்தில், அவ்விடம் ஒரு குட்டி லண்டன் போல இருந்தது. வட்டமான தொப்பி அணிந்த ஆங்கிலேயக் கனவான்களுடன், கால்கள் தெரியும் விதத்தில் வண்ண வண்ண ஸ்கர்ட் அணிந்த வெள்ளை நிற பெண்மணிகள், அந்த நிறுத்ததிதில் தான் பேருந்தில் ஏறுவர்!

அந்த வெள்ளைக்கார ஜோடிகள் கை கோர்த்தபடி இருப்பர். இந்த கை கோர்த்தல், பொது இடத்தில் செய்யத்தகாத காரியமாக கல்யாணமான இந்தியர்கள் நினைத்த காலம் அது ! சில கனவான்களிடம் பீர் வாசனை அடிக்கும். வெள்ளைக்கார நங்கைகளோ வாசனை திரவிய தொழிற்சாலை போல கமகமவென்று வருவார்கள் !

பட்டணத்திலிருந்து பூந்தமல்லியை நோக்கி ஒரு இரவுப் பயணத்தின்போது, பார்க்க குளிரில் நடுங்கும் எலி போல காணப்பட்ட முனிசிபல் நீதிமன்ற பத்திர வியாபாரி என்னருகில் அமர்ந்திருந்தார். பேருந்து ஓடத் துவங்கியவுடன், அவரது தலை பக்கத்தில் இருப்பவர் தோளில் சாய்ந்து விடுவது என்பது பொதுவாக நடக்கும் விஷயம் தான், குறட்டையும் உண்டு :)

அக்கால பேருந்துகளில், இருவர் அமரக்கூடிய இருக்கைக்கு நேர் எதிரே இன்னும் இருவர் அமரும் விதமாக, இருக்கை அமைப்பு இருந்தது. எங்கள் இருக்கைக்கு எதிரே, கோட் சூட் அணிந்த ஓர் ஆங்கிலக் கனவானும், நீண்ட கால்கள் கொண்ட சிற்பம் போல இருந்த அவரது மனைவியும் அமர்ந்திருந்தனர். சாலையில் ஒரு மூதாட்டி முக்தி அடைவதை தடுக்கும் பொருட்டு, பேருந்து ஓட்டுனர் ஓர் அவசர பிரேக் அடித்ததில், என்னருகில் தூங்கிக் கொண்டிருந்த பத்திர வியாபாரி, வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப் போல, அவ்வெள்ளைக்கார பெண்மணியின் தாராள மடியில் தஞ்சம் அடைந்தார் :)

நிலைமையை உணர்ந்த வியாபாரி, 'சாரி மேடம், சாரி மேடம்' என்பதை, ஏதோ ஒரு பிராயசித்த மந்திரத்தை ஜெபிப்பது போல் பல தடவை உச்சரித்தார்! "முதலில் எழுந்திரு மேன், அப்புறம் மன்னிப்பு கேளு" என்று கூறியபடி, அந்த ஆங்கிலேயப் பெண்மணி தனது மடியிலிருந்த வியாபாரியின் தலையை, ஒரு வீங்கிய பெருச்சாளியை அப்புறப்படுத்துவது போல, தனது இடது கையால் விலக்கித் தள்ளினார் ! பிறகு அப்பெண்மணி தனது ஸ்கர்ட்டை சரி செய்து கொண்டபோது, பழனி சிரிப்பை அடக்கிக் கொண்டு என்னைப் பார்த்து கண்ணடித்தார் :)

ஒரு மழைக்கால இரவில் கடைசிப்பேருந்தில் நானும் என் தந்தையாரும் பட்டணத்திலிருந்து பூந்தமல்லியில் உள்ள எங்கள் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். தந்தையார் தூங்கி விட்டிருந்தார். 'பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டை அடைவதற்குள் ஹிக்கின்பாதம்ஸ் கடையில் வாங்கிய புத்தகங்கள் அத்தனையும் மழையில் நனைந்து விடுமே, என்ன செய்வது?' என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோது, பேருந்து மெல்ல நின்றது. வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது! எனது தந்தையாரை எழுப்பிய பழனி, நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதைத் தெரிவித்தார்.

சாலையில் என் பாதம் பட்டவுடன் தான் கவனித்தேன், எங்கள் வீட்டு வாசலிலேயே நாங்கள் இறக்கி விடப்பட்ட விஷயத்தை !!!

எ.அ.பாலா

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

Sunday, December 09, 2007

Star25b. சிறுவயது சிந்தனைகள் - 6 (மீள்பதிவு)

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

வடக்குக் குளக்கரைத் தெருவில் அமைந்த ஒரு பழைய வீட்டில் நாங்கள் வாழ்ந்த காலத்தில், பள்ளியில் உடன் படித்த பல நண்பர்களின் வீடுகள் அடுத்தடுத்து அமைந்திருந்தன (அல்லது) அத்தெருவின் வீடுகளில் இருந்த பிள்ளைகள் எல்லோரும் நண்பர்களாக இருந்தோம் என்றும் கொள்ளலாம்! அதென்னவோ, எங்கள் தெருவில் ஆண்பிள்ளைகள், பெண்பிள்ளைகளை விட அதிக எண்ணிக்கையில் இருந்தனர். பெண்பிள்ளைகள் என்றால், 5 அல்லது 6 பேர் (என் தமக்கையும் சேர்த்து) தான் இருந்தனர். ஆனால் ஆண்பிள்ளைகளோ ஏராளம்! கிட்டத்தட்ட 40 தடியர்கள் இருந்தோம்! பள்ளி முடிந்து நாங்கள் அனைவரும் வீடு திரும்பிய பின் ஒரு முக்கால் மணி நேரம் தெருவே இரைச்சலாக இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! பின்னர், நாங்கள் கடற்கரைக்கு, கிரிக்கெட் அல்லது கபடி விளையாடச் சென்று விடுவது வழக்கம்.

எங்கள் குழுவிலிருந்த ஒருவருக்கும் பொதுவாக, பெண்பிள்ளைகளை கேலி, கிண்டல் செய்யும் பழக்கம் கிடையாது. பள்ளி, பள்ளி விட்டால் நிறைய அரட்டை/விளையாட்டு, கொஞ்சம் படிப்பும், என்று வாழ்ந்த காலமது! எங்கள் வீட்டின் இரு மருங்கிலும் கடைகள் இருந்தன. ஒன்று 'நாயுடு மளிகை' என்று அழைக்கப்பட்ட விஜயா ஸ்டோர்ஸ்; மற்றது, மணியை ஓனராகக் கொண்ட, 'மணி கடை' என்ற பொட்டிக்கடை. மணிகடையில் எங்களுக்கு வேண்டிய சகலமும் கிடைக்கும். பர்ஃபி, கடலை உருண்டை, புளிப்பு மிட்டாய், தேங்காய் பிஸ்கெட், பன்னீர் சோடா வகையறாக்களும், எங்கள் விளையாட்டு சீஸனுக்கு ஏற்றாற்போல், கோலி, பம்பரம், ரப்பர் பந்து, கில்லி தாண்டு போன்றவைகளும்! மணி சற்று குள்ளமான குண்டான உருவம் உடையவர். அவரது கடை சற்று உயரத்தில் அமைந்திருந்ததால், கடையில் ஏறி அமர்வதற்கு ஒரு சிறு ஏணி வைத்திருந்தார். மணி கடையில் ஏறிய பிறகு, அவரை அவ்வப்பொழுது நாங்கள் கிண்டல் செய்வது வாடிக்கையாக நடக்கும் ஒரு விஷயம்! கடையிலிருந்து வேகமாக இறங்கி வந்து எங்களை பிடிப்பது அவரால் இயலாத காரியம் என்பதால்!

அவர் கடையில் ஒரு வகை லாட்டரி பிரசித்தம். ஒரு அட்டையில், மடிக்கப்பட்ட சிறு கலர் காகித சீட்டுகள் பல வரிசைகளில் ஒட்டப்பட்டிருக்கும். பரிசுக்குரிய சீட்டில் ஒரு எண் அச்சிடப்பட்டிருக்கும். 5 பைசாவுக்கு ஒரு சீட்டை கிழித்துப் பிரிக்கலாம். உள்ளிருக்கும் எண், ஒரு சிறிய பரிசுப்பொருளையோ, சாப்பிடும் பதார்த்தத்தையோ குறிக்கும். எண் அச்சிடப்படாத (வெற்று) சீட்டை கிழித்துப் பிரிக்க நேர்ந்தால், கொடுத்த காசு அம்பேல்! பெரும்பாலும் இப்படியே நிகழ்ந்தாலும், நாங்கள் நம்பிக்கை இழக்காமல்(!) நிறைய காசு விட்டிருக்கிறோம்! சூதாட்ட ஆர்வத்தின் ஆரம்ப விதைகள் அப்போதே விதைக்கப்பட்டு பின்னாளில் மூணு சீட்டும், ரம்மியும் விடிய விடிய விளையாடியிருக்கிறோம்!!! சான்றோர் களவையும் கற்று மறக்கச் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா? என்ன, மறப்பது சற்று கடினமான விஷயம், அவ்வளவே!!!

அடுத்த தெருவில், வேலு கடை (அதுவும் பொட்டிக் கடை தான்!) இருந்தது. அக்காலத்திலேயே, தற்போது டாடா, அம்பானிகளுக்கு இடையே நிலவுவது போல(!) மணிக்கும் வேலுவுக்கும் இடையே ஒரு தொழில் போட்டி (BUSINESS RIVALRY!) நிலவியது என்று கூறலாம்! வேலு கடையில் ஒரு பொருளை வாங்கச் சென்றால், மணி தன் கடையில் அப்பொருளை என்ன விலைக்கு விற்கிறார் என்று வேலு கேட்டு தெரிந்து கொள்வார். "அதை விட 5 பைசா கம்மி விலையில் நான் தருகிறேன். உன் நண்பர்களிடமும் சொல்லு!" என்பார். நான் வேலைக்குச் சேர்ந்த சமயம், மணி கடையை மூடி விட்டு, எங்கோ சென்று விட்டார். வேலு, இறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது.

திருவல்லிக்கேணியின் பல பழைய வீடுகள் இடிக்கப்பட்டு, அடுக்கு மாடி குடியிருப்புகள் தோன்றி விட்ட நிலையிலும், நான் வாழ்ந்த பழைய வீடும் அதை ஒட்டிய மூன்று வீடுகளும் இன்று வரை அப்படியே இருப்பது ஆச்சரியமான ஒரு சங்கதி தான்! ஆனால், நான் அந்த வீட்டினுள் நுழைந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆகி விட்டன. நான் வாழ்ந்த பழைய வீடும், அடுக்கு மாடி குடியிருப்பால் விழுங்கப்படுவதற்கு முன், ஒரு முறை உள்ளே சென்று பார்த்து, சிறிது நேரம் என் பழைய ஞாபகங்களோடு உறவாட வேண்டும், சில புகைப்படங்களும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும், என்று சில வருடங்களாகவே எண்ணிக் கொண்டிருந்தேன்! ஏதோ ஒருவித தயக்கம்!

சில நாட்களுக்கு முன், என் மகளுடன் அவ்வழியாக சென்று கொண்டிருந்த என்னை, நான் வாழ்ந்த பழைய வீட்டுக்கு அடுத்த வீட்டில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் என் சிறுவயது தோழன் நரசிம்மன் அழைத்து பேசிக் கொண்டிருந்தான். அவனிடம் "நான் இருந்த பழைய வீட்டை என் மகளுக்கு காட்ட வேண்டும், கூட வருகிறாயா?" என்றவுடன், தற்போது அவ்வீட்டில் வசிப்பவர்களுடன் பழக்கமில்லை என்று கூறி மறுத்து விட்டான். என் மகளின் மிகுந்த கட்டாயத்தின் பேரில், வாசலில் அமர்ந்திருந்த கண் பார்வை மங்கிய பாட்டியின் விசாரணைக்கு உட்பட்டு, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வலது காலை முன் வைத்து வீட்டில் நுழைந்தேன்!

பழைய மர வாசற்கதவு இரும்புக் (grill) கதவாக மாறியிருந்தது. இடதுபுற திண்ணை இன்னும் இருந்தது. ரேழிக்கு முன்னே அக்காலத்தில் காணப்பட்ட, வேலைப்பாடுகள் நிறைந்த, பிரம்மாண்ட மரக்கதவு இருந்த இடத்தில், ஒரு நோஞ்சான் கதவு முளைத்திருந்தது! மேல்தளத்தில் பதிக்கப்பட்ட சதுர கண்ணாடி வாயிலாக ஒளி பாய்ந்தும், சற்றே இருள் சூழ்ந்த, அதே பழைய நடை! அதே பழைய வாசனை, சில்லிப்பு! அடுத்தடுத்து இருந்த வலதுபுற அறைகளுக்கு (
அக்கால சமையலறைகள்) இடையே இருந்த சுவர்கள் இடிக்கப்பட்டு, இரு குடும்பங்கள் வசிக்கத்தக்க 2 போர்ஷன்கள் உருவாகியிருந்தன. பழைய மாடிப்படிகளுக்குக் கீழே, Hand pump முன்பிருந்தது போலவே! ஆனால், அப்போதிருந்த ஒரு பித்தளை பாயிலரை காணவில்லை!!! வீட்டின் பின்புறம் இருந்த குளியல் மற்றும் கழிவறைகளின் கதவுகள் மட்டும் புதிதாக இருந்தன! 'பல ஆடைகள்' கண்ட துணி துவைக்கும் கல் அப்படியே இருந்தது!

அக்காலத்தில் எங்களின் சக குடித்தனவாசிகளைப் பற்றிய ஞாபகங்கள் பெருக்கெடுத்தன! குறிப்பாக, எப்போதும் மங்கலகரமாகவும், சிரித்த முகத்துடனும் காணப்பட்ட, சுமங்கலியாய் இறந்து போன ராஜமாமி, அவரது 'பஞ்ச பாண்டவ' மகன்களில் ஒருவனான 'சிவாஜி' சாரதி, எச்சில் தெறிக்க படபடவென பேசும் 'தீர்த்தவாரி' ராகவன் மாமா, அதையும் பொருட்படுத்தாமல் அவருடன் பேசத் தூண்டும் வகையில் அமைந்த அவரது மிக அழகிய மகள் 'வெடி' ரமா, பூமா டீச்சரை தவிக்க விட்டு, 12 வருடங்களுக்கு முன் திடீரென்று காணாமல் போன, PONDS கம்பெனியில் வேலை பார்த்து வந்த 'வெத்தலை பாக்கு' ஸ்ரீநிவாசன் மாமா, வாய் ஓயாமல் வம்படிக்கும் வாளிப்பான சுகுணா மாமி, தற்போது ராணுவத்தில் பணி புரியும் நண்பன் சம்பத் குமார், ஓய்வு ஒழிச்சலின்றி எந்நேரமும் ஏதாவது வேலை செய்து கொண்டிருந்த என் பாட்டி ஜானகியம்மாள், உத்தரத்திலிருந்து கயிற்றை தொங்கவிட்டு, அதில் கிரிக்கெட் பந்தை கட்டி, வீட்டிற்குள்ளேயே பயிற்சி செய்த ஸ்ரீதர், SV சேகருடன் நாடகங்களில் நடித்த பக்கத்து விட்டு 'பொட்லம்' ராஜாமணி, பாத்திரம் கழுவி துணி துவைத்து எங்களுக்காக மாங்கு மாங்கென்று உழைத்த, இன்று வரை எங்கள் மேல் பிரியத்துடன் இருக்கும் பணிப்பெண் கன்னியம்மாள், என் திருமணத்திற்கு விலை உயர்ந்த கடிகாரத்தை பரிசாக வழங்கிய, தற்போது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் கன்னியம்மாளின் தாயார் லஷ்மியாச்சி ஆகியோர் குறித்த நினைவுகள் / நிகழ்வுகள் பல தோன்றின.

என் மகளுக்கு வீட்டைப் பற்றியும், அங்கு வாழ்ந்த மனிதர்கள் பற்றியும் விவரித்தபடி, மாடியேறி சென்றேன். முன் போலவே, காற்று முகத்தில் அடித்து வரவேற்றது! கீழே மாற்றப்பட்டது போலவே, மாடியிலும், இரு படுக்கையறைகள், சமையலறைகளாக மாற்றப்பட்டு, இரு குடும்பங்கள் வசிக்கத்தக்க 2 போர்ஷன்கள் உருவாகியிருந்தன. நான் கோலி, கில்லி, கிரிக்கெட் ஆடிய மொட்டை மாடிக்குச் செல்ல அக்காலத்தில் படிக்கட்டுக்கள் கிடையாது. பக்கத்து வீட்டு வழியாகவோ அல்லது ஜன்னல் கம்பி பிடித்து, சாரத்தில் தலையை இடித்துக் கொள்ளாமல் சிரமப்பட்டு ஏறியோ மொட்டை மாடிக்குச் செல்வது எங்கள் வழக்கம்! தற்போது, மேலே செல்ல ஒரு இரும்பு ஏணி முளைத்திருந்தது! நான் பார்த்தவரை, பழைய வீடு பெருமளவு அப்படியே தான் இருந்தது. பழைய மனிதர்களைத் தான் காணவில்லை! வீட்டை புகைப்படங்கள் எடுக்கவும் மறந்து விட்டேன்!

என்றென்றும் அன்புடன்
பாலா


************************
இப்பதிவுக்கு அப்போது வந்த பின்னூட்டங்கள்:
dondu(#4800161) said...
"நான் வாழ்ந்த பழைய வீடும், அடுக்கு மாடி குடியிருப்பால் விழுங்கப்படுவதற்கு முன், ஒரு முறை உள்ளே சென்று பார்த்து, சிறிது நேரம் என் பழைய ஞாபகங்களோடு உறவாட வேண்டும், சில புகைப்படங்களும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும், என்று சில வருடங்களாகவே எண்ணிக் கொண்டிருந்தேன்"

இந்த இடம் வரை நீங்கள் எழுதியது நான் ஏற்கனவே உங்கள் இப்பகுதியில் படித்தது போன்ற உணர்வைத் தந்தது. ஆனால் உங்கள் முந்தைய 5 பகுதிகளைப் பார்க்கும் போது எனக்கு இப்போது அப்பத்திகள் தென் படவில்லை. ஒரு வேளை போன சனிக்கிழமை தங்கள் வீட்டுக்கு வந்த போது இது பற்றிப் பேசப்பட்டதோ? அப்படியும் தோன்றவில்லையே. அல்லது நீங்கள் முன்பு எழுதியதை இணையம் விழுங்கி அதை இப்போது உங்கள் நகலிலிருந்து புதுப்பித்தீர்களா? புதுப்பிக்கும்போது இற்றைப்படுத்தி (update) எழுதினீர்களா? எது எப்படியாயினும் அருமையான நினைவுகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3:58 PM, January 21, 2005

Moorthi said...
ஆட்டோகிராப் மாதிரியான நினைவுகள். காக்காய் கடி கடித்துத் தின்ற மிட்டாய்களும் ஓடிப்பிடித்து விளையாடிய நினைவுகளும் எங்கள் பழைய வீடும் என்னுள் வந்துபோனது. பழைய நண்பர்களின் நினைவுகளையும் என்னுள் எழுப்பிச் சென்றீர்கள்.

10:17 AM, January 22, 2005

Anonymous said...
good recollection

2:45 PM, January 22, 2005

CT said...
Made me to remember the movie autograph except I don't see any infatuation related incidents.........nice memoir

8:30 AM, September 03, 2006
******************************
எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

Star 22c.வெகுண்டு (என் முதல் சிறுகதை - மீள்பதிவு)

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

வெகுண்டு

நான் படித்ததெல்லாம் சென்னையின் ஒரு பகுதியான திருவல்லிக்கேணியின் இந்து உயர்நிலைப் பள்ளியில் தான். கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையான அப்பள்ளி அமைந்த பெரிய தெரு, பெயரளவில் தான் பெரிசு. அவ்வளவாக அகலம் இல்லாத அத்தெருவில், பல வகைக் கடைகளும், வங்கிகளும், தங்கும் விடுதிகளும் 'Big street பிள்ளையார்' கோயிலும் இருந்தன. இதனால், பெரிய தெரு எந்நேரமும் பரபரப்பாகக் காணப்படும். தெருவின் இருமருங்கிலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, மீதமிருந்த தெருவின் மத்தியப் பகுதியில், மனிதர்களும், வாகனங்களும், அல்லிக்கேணி மாடுகளும் இடத்துக்காக சண்டை போட்ட வண்ணம் இருக்கும் காட்சியை, தினமும் காணலாம்.

சரி சரி, விஷயத்துக்கு வருகிறேன்! நான் அப்போது 7-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். உடன் படித்த மாணவனான .... பெயர் ஞாபகத்திற்கு வர மறுக்கிறது ... என் நல்ல நண்பன். ஆஜானுபாகு ஆக, நல்ல பால் வண்ணத்தில் இருந்த அவனுக்கு 'வெள்ளை குண்டன்' என்ற காரணப்பெயர் சூட்டப்பட்டு, நாட்போக்கில் அது மருவி, 'வெகுண்டு' என்பது நிலைத்து விட்டது. எனக்கும் பள்ளியில் புனைப்பெயர் உண்டு. அதற்கும் நான் கூற வந்த விஷயங்களுக்கும் சம்பந்தம் இல்லாததால், அதைப்பற்றிய ப்ரஸ்தாபம் இங்கு தேவையற்றது.

வெகுண்டுவின் தந்தையார், உடுப்பியிலிருந்து சென்னை வந்த கன்னடக்காரர். அவர் தொழில் என்ன என்று இந்நேரம் நீங்களே யூகித்திருப்பீர்களே! கரெக்ட்! அவர் மேற்கூறிய பெரிய தெருவில் 'உடுப்பி' வகை உணவகம் நடத்தி வந்தார். மனிதர், பக்திமான், நேர்மையானவர், மிக நல்லவரும் கூட. இந்த அளவுக்குக் கூட அவரை நான் உயர்த்திப் பேசவில்லை என்றால், நன்றி கெட்டவனாகி விடுவேன். அவ்வுணவகத்தில், வெகுண்டுவுடன் அமர்ந்து எவ்வளவு தடவை ஓசியில் சாப்பிட்டிருக்கிறேன் தெரியுமா?!

வெகுண்டுவை படிப்பில் மக்கு என்று கூற இயலாது. 'மஹாமக்கு' என்று தான் சொல்ல வேண்டும். ஏனோ தெரியவில்லை. சரஸ்வதி தேவி தன் கடாட்சத்தை அவன் பக்கம் திருப்ப மறந்தே போனாள். அவனை 'வெகுண்டு' என்று கூப்பிடுவோமே தவிர, அவன் ஒருபோதும் வெகுண்டெழுந்தது கிடையாது! சாதுவானவன். சுருள் சுருளாக முடியும், அமைதியான முகமும், அசப்பில் பார்ப்பதற்கு 'பாச மலர்' படத்தில் வரும் சிவாஜி கணேசன் போலவே இருப்பான். அதி தீவிர சிவாஜி ரசிகனும் கூட. அந்த 'படிக்காத மேதை'யால் தான் நானும் ஒரு சிவாஜி ரசிகன் ஆனேன். வெகுண்டுவின் நடை உடை பாவனைகளில் 'சிவாஜித்தனம்' மிகுந்திருக்கும். அவனுக்கு பல சிவாஜிப் படப்பாடல்களும் வசனங்களும் அத்துப்படி!! பல சமயங்களில் சிவாஜியின் திரைப்பட வசனங்களை எனக்கு அழகாகவே பேசிக்காட்டுவான். கேட்டே ஆக வேண்டும்! இல்லையென்றால், ஓசி சாப்பாடு கிடைக்காதே!

வெகுண்டு ஒவ்வொரு சிச்சுவேஷனுக்கும் ஒரு சிவாஜி பட வசனம் அல்லது பாட்டு தயாராக வைத்திருப்பான்! மளிகைக் கடைக்காரர் அவன் அம்மாவிடம் பணம் கேட்கும்போது 'வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கேன் தருவது பாக்கி!' என்பான். அவன் அண்ணன் தந்தையாரிடம் அவனைப் போட்டுக் கொடுத்தால் 'அண்ணன் காட்டிய வழியம்மா' என்று பாடுவான். என் அக்கா சற்று வேகமாக நடந்து சென்றால் 'ஆஹா, மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்' என்று கிண்டலடிப்பான். பக்கத்து வீட்டு அறுவைக் கிழவர் பரமபதம் பெற்றபோது 'போனால் போகட்டும் போடா' என்று விரக்தியில்லாமல் பாடினான்!!! மொத்தத்தில், வெகுண்டு இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. வெகுண்டு ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு, திருவிளையாடலில் சிவாஜி ஸ்டைலாக நடப்பது போல், குளியலறை நோக்கி நடந்து செல்லும் காட்சி இன்னும் என் கண்ணிலேயே நிற்கிறது.

வெகுண்டு அரையிறுதி தேர்வில் ஆங்கிலத்தில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், அவன் தந்தையார் வெகுண்டார். அவனை என் தாத்தாவிடம் ஆங்கில இலக்கணம் கற்க அனுப்பி வைத்தார். புதுக்கோட்டை உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்ற என் தாத்தாவிடம் பல வருடங்களுக்குப் பின் அகப்பட்ட ஒரே மாணவன் வெகுண்டு! அதனால், அவன் பாடு படுதிண்டாட்டம் ஆயிற்று! என் தாத்தா சாதாரணமாகவே ஒரு விஷயத்தை 2 தடவை கூறுவார். படிப்பு சம்பந்தப்பட்டதை, 4 முறை அழுத்தமாகக் கூறுவார்! வெகுண்டு஢ சமாசாரத்தில், கற்றுக் கொடுக்க வேண்டிய ஒவ்வொன்றையும் 8 முறை சொல்லி, அதோடு நில்லாமல், அவனை 2 முறை திரும்ப கூறச்சொல்லி வாட்டி வறுத்தெடுத்து விட்டார்! "உன் தாத்தா கிட்ட டியூஷன் போணுன்றதை நினைச்சாலே வயத்தை கலக்கறதுரா" என்று அவன் புலம்பும்போது அவனைப் பார்க்க எனக்குப் பாவமாய் இருக்கும்! "நம்ம வாத்தியாரை விட என் தாத்தா எவ்வளவோ மேல் இல்லையா?" என்று நான் ஆறுதல் கூறுவேன்.

எங்களது வகுப்பு ஆசிரியரான திரு.ராமசாமி அய்யங்கார் கண்டிப்புக்கு பேர் போனவர். சிறுதவறு செய்தாலும் பிரம்பால் விளாசி விடுவார். நான் படிப்பில் கெட்டி, அதனால் அடி வாங்கும் பிரச்சினை இருந்ததில்லை. ஆனால், விதி ஒரு முறை வேறு ரூபத்தில் விளையாடி, அவரிடம் பிரம்படி பட வைத்ததை என்னவென்று சொல்ல?! காரணம்?

வேறு யார்? வெகுண்டு தான்! சுட்டுப் போட்டாலும் படிப்பேறாத அவனை ஓடவிட்டு நிதானமாகத் துரத்தி 'அந்தணன் இரக்கமில்லான்' என உரக்கச் சொல்லியபடி, ராமசாமி வாத்தியார் பிரம்படி வழங்குவது, வகுப்பறையில் வாடிக்கையாக நிகழும் ஒரு விஷயம் தான்! வெகுண்டுவும் லேசுப்பட்டவன் அல்லன். வாத்தியார் அடிப்பதற்கு முன்னமே, அவரை வெறுப்பேற்றும் வண்ணம், 'ஐயோ, இப்படி அடிக்கிறீங்களே, உயிர் போறதே, ஐயோ, கொல்றாறே!' என்று கூக்குரலிடத் தொடங்கி விடுவான். அச்சமயங்களில் வகுப்பிலுள்ள நானும் மற்ற மாணவர்களும் பீதி, பச்சாதாபம், சிரிப்பு போன்ற பல்வகை உணர்வுகளுக்கு ஆளாகி இஞ்சி தின்ற மந்திகள் போல் காட்சியளிப்போம்!?

வாத்தியார் ஒரு முறை வெகுண்டுவை ஏதோ ஒரு பாடத்தை மனப்பாடம் செய்து என்னிடம் ஒப்பிக்குமாறு கூறிச் சென்று விட்டார். அவனும் முயன்றான். ஆனால், அவனாவது ஒப்பிப்பதாவது!? என் கன்னத்தைத் தடவி கெஞ்ச ஆரம்பித்து விட்டான். நானும் கவசகுண்டலம் இல்லாத கர்ணனாக என்னை பாவித்துக் கொண்டு, செஞ்சோற்றுக் கடன் தீர்க்க முற்பட்டேன்!! வகுப்புக்குத் திரும்பி வந்த ஆசிரியரிடம் வெகுண்டு பாடத்தைப் படித்து அருமையாக ஒப்பித்து விட்டதாக பொய் உரைத்தேன். இதில் ஒரு தமாஷ் பாருங்கள்! 'பொய் உரைத்த வாய்க்கு போஜனம் கிடைக்காது' என்பார்கள். நானோ வெகுண்டுவிடம் போஜனம் வாங்கி உண்டதால், பொய் சொல்லும் நிலைக்கு ஆளானேன்!

விதி தன் விளையாட்டை ஆரம்பித்தது! சதா சர்வ காலமும் என் கூற்றை நம்பும் ராமசாமி வாத்தியார், என்றும் இல்லாத் திருநாளாக அன்று, 'சரி, நீ படித்ததை மறுபடி என்னிடம் ஒரு தடவை கூறு, பார்க்கலாம்!' என்று அந்த திருவாழத்தானிடம் கேட்டார். எனக்கோ அஸ்தியில் ஜுரம் கண்டது. வெகுண்டு அபரிமிதமாக விழிக்கவே, வாத்தியார் என் பக்கம் திரும்பி, 'படிப்போடு பொய் உரைப்பதும் உனக்கு நன்று வருமோ??' என்ற விபரீத வினாவெழுப்பி சில பிரம்படிகளை எனக்குப் பரிசாக வழங்கினார்.

அதுவரை பிரம்படியே கண்டிராத எனக்கு, அந்த அடிகள் தந்த வலியில் சப்தநாடியும் ஒடுங்கிப் போயிற்று! இரண்டு நாள் காய்ச்சல் வேறு! காய்ச்சலின் காரணமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது 'இனி வெகுண்டுவிடம் ஓசியில் வாங்கி உண்பதில்லை' என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்! என்ன செய்வது? கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்! என் பள்ளி வாழ்க்கையில், நான் பட்ட முதலும் கடைசியுமான பிரம்படிகளைப் வாங்கித் தந்த பெருமை என்னருமை வெகுண்டுவுக்குத் தான்!

வெகுண்டுவை ராமசாமி வாத்தியார் அடுத்த வருடமும் 7-ஆம் வகுப்பில் உட்கார வைத்து விடுவார் என்று தான் நான் நினைத்தேன். ஆனால், அவன் தேர்ச்சி பெற்று என்னை அதிசயத்தில் ஆழ்த்தி விட்டான்! அடுத்த ஓரிரு வருடங்களில் அவன் தந்தையார் ஹோட்டலை மூடி விட்டார். அதன் தொடர்ச்சியாக வெகுண்டுவும் பள்ளியிலிருந்து விலகி அவன் குடும்பத்தார் வேறேதோ ஊருக்கு குடி பெயர்ந்து விட்டனர். ஹோட்டல் இருந்த இடத்தில் 'திருநெல்வேலி அல்வா ஹவுஸ்' என்ற போர்டு மாட்டிய இனிப்புக் கடை தோன்றியது. காலப்போக்கில் வெகுண்டுவைப் பற்றிய ஞாபகங்கள் என்னை விட்டு மெல்ல மெல்ல விலகி விட்டன. சிவாஜி பட வசனங்களும் பாடல்களும் கூடத் தான்!

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*


நாலைந்து வருடங்களுக்கு முன், ஒரு நவராத்திரி விடுமுறையில் என் மனைவி மகளுடன் மைசூரை சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தேன். மைசூரின் உலகப் பிரசத்தி பெற்ற தசரா ஊர்வலத்தை கண்டு ரசிக்க ஒரு ஜன சமுத்திரமே திரண்டிருந்தது. ஜம்பூ சவாரி என்றழைக்கப்படும் அவ்வூர்வலத்தில் பிரதான தளபதி முன்னே வர, தேவி சாமுண்டேஸ்வரியின் விக்ரகம் வைக்கப்பட்ட தங்க ஹௌடாவை முதுகில் சுமந்தபடி அழகாக அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட யானை ஒன்று பின்னே நடந்து வந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மற்ற பட்டாடை உடுத்திய கம்பீர யானைகளும், குதிரை வீரர்களும், பாண்டு மற்றும் நாகஸ்வர வாத்தியக்காரர்களும், கலைக்குழுக்களும் வரிசையாக வந்த காட்சி பார்க்க மிக அற்புதமாக இருந்தது.

ஜம்பூ சவாரி முடிந்ததும், என் மனைவி 'அம்மு மத்யானம் ஒண்ணுமே சாப்பிடலை. வழியிலேயே எங்கேயாவது சாப்டுட்டு அப்றமா நம்ம ரூமுக்கு போயிடலாம்' என்றாள். ஏதோ ஒரு ஹோட்டலில் எதையோ சாப்பிட்டு விட்டு பில்லுக்கு பணம் தரும்போது, கல்லாவில் அமர்ந்திருந்தவர் என்னை ஒரு மாதிரி சந்தேகப் பார்வை பார்ப்பதை கவனித்து 'சார், நல்ல நோட்டு தான், கவலையே படாதீங்க!' என்றேன். அவர் இன்னும் சந்தேகம் விலகாமல், ஒருவித பிரமிப்புடன் 'சார், நீ ... நீங்கள் ஹிண்டு ஹைஸ்கூல் பாலாஜி தானே?! என்னைத் தெரியலையா? நான் தான் வெகுண்டு!' என்றார்(ன்)!?

என்னுடன் பள்ளியில் படித்த வெள்ளைக் குண்டன், அச்சமயம் சற்றே மெலிந்து கறுத்து முன்மண்டையில் பெருமளவு முடியும் இழந்திருந்ததால், என்னால் அவனை யாரென்று அறிய முடியாமல் போனது! வெகுண்டு கேட்ட அடுத்த கேள்வி,'ராமசாமி வாத்தியார் எப்படி இருக்கிறார்?'. வாத்தியார் பல ஆண்டுகளுக்கு முன்னரே வகுப்பில் பாடம் எடுக்கும்போதே மாரடைப்பால் இறந்து விட்டதை அவனிடம் சொல்ல எனக்கு மனம் வரவில்லை! அவனுக்காக ஒரு முறை வாத்தியாரிடம் பொய் சொல்லி பிரம்படி பட்டது என் நினைவில் நிழலாடியது! சிறுவயதில் இருந்தது போலவே, அச்சமயமும் சாப்பிட்டதற்கு பணம் வாங்க மறுத்து வெகுண்டு என்னை மேலும் கடன் பட்டவனாக ஆக்கி விட்டான்!

Published in Thinnai Nov 18 2004

என்றென்றும் அன்புடன்
பாலா

************************************************

இப்பதிவுக்கு அப்போது வந்த பின்னூட்டங்கள்:

Venkatesh R said...
Good Story Balaji.Vazhthukkal.

9:19 PM, November 20, 2004

enRenRum-anbudan.BALA said...
Comments from MARATHTHADI Group:

மரத்தடி விவாதங்களில் வெகுண்டு விடாமல் ஒரு கற்கண்டு கொடுத்திருக்கீங்க பாலாஜி
அன்புடன்
ரமேஷ் அப்பாதுரை


இது கதை மாதிரி தெரியலையே... முதற்கை அனுபவம் போல இருக்கே..
தப்பா நினைச்சுக்காதீங்க.. கலக்கிட்டீங்க... மிக நல்ல நேர்த்தியான
நடை.. எந்த விஷயமும் நல்லா இருக்குன்னா அதுல ஒரு நேர்மையும் அர்பணிப்பும்
இருக்கும். உங்க கதையில அது தெரியுது...

நீங்கள் நிறைய கதை எழுதியிருக்கீங்களா... (என்னா மறுபடியும்
கோவிச்சுக்காதீங்க... இந்த கதையில ஒரு குழந்தைத்தனம் தெரியுது...)

வாழ்த்துக்கள்... இன்னும் இது மாதிரி நிறைய விஷயதானம் செய்யுங்கள்..

அன்புடன்
ஸ்ரீகாந்த்.


பாலாஜி

சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.

இது உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவம் போல் எழுதியிருக்கிறீர்கள்.
அப்படியென்றால் சிறந்த நடையில் சொல்லியிருக்கிறீர்கள்.
கற்பனை என்றால் அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்

வாழ்த்துக்கள்.

நடராஜன்.


அன்பு பாலாஜி,

நீங்கள் சிறுகதை என்று தலைப்பிட்டு இருந்ததால், நானும் அதை சிறுகதை என்றே நம்பி படித்து முடித்தேன்.
:-)

ஆனால் சற்றே சிரமப்பட்டிருந்தால் இதை நல்லதொரு சிறுகதையாக்கியிருக்க முடியும் என்று தோன்றுகிறது.

இந்தக் கதையில் (?) நான் முக்கியமாக ரசித்தது அதிலிருந்த நகைச்சுவை அம்சத்தை. தமிழர்களிடம்
நகைச்சுவை உணர்வு தொலைந்து போய்விட்டதோ என்று எண்ணுமளவிற்கு இன்று பெரும்பாலான படைப்புகளில் தரமான
நகைச்சுவையை காண முடிவதில்லை. உங்கள் கதையைப்படிக்கும் போது நிறைய இடங்களில் மனமார சிரிக்க
முடிந்தது.

தொடர்ந்து எழுதுங்கள்.

சுரேஷ் கண்ணன்

10:57 PM, November 20, 2004

Anonymous said...
Balaji

I enjoyed your autograph. Just my thoughts also went back to days like that. I had a different Vehundu in my life.

Anbudan
S.Thirumalai

9:35 AM, November 21, 2004

dondu(#4800161) said...
மிக அருமையான வலைப்பூ. நீங்கள் குறிப்பிட்டுள்ள ராமசாமி ஐயங்கார் யார் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை 1962-க்குப் பிறகு நம் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்திருக்கலாம். நான் படித்தப் போது இருந்த ஆசிரியர்கள் உங்கள் காலத்தில் அனேகமாக எல்லோரும் ஓய்வுப் பெற்றுச் சென்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒரே ஒரு முறைதான் அடிவாங்கியிருக்கிறீர்களா? ரொம்ப அதிர்ஷ்டம் உங்களுக்கு. என் எல்லா வகுப்புகளிலும் முதல் ஐந்து மாணவர்களுக்குள் நான் இருந்து வந்தாலும் தினசரி ஒரு முறையாவது பெஞ்சு மேல் நின்றிருக்கிறேன் அல்லது அடி வாங்கியிருக்கிறேன் அல்லது வெளியே அனுப்பப் பட்டிருக்கிறேன் அல்லது .... விடுங்கள் அதைப் பற்றி இப்போது என்ன!

4:10 PM, November 21, 2004

Chandravathanaa said...
பாலா

உங்கள் பதிவு நன்றாக இருந்தது.
மிக நெருங்கிப் பழகியவர்களுடனான இப்படியான எதிர் பாராத சந்திப்புக்கள்
மறக்க முடியாத சுகங்கள்.

நட்புடன்
சந்திரவதனா

3:38 PM, November 22, 2004

enRenRum-anbudan.BALA said...
அன்பான நண்பர்களே,
உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
என்றென்றும் அன்புடன்,
பாலா

5:35 PM, November 22, 2004

Desikan said...
மிக அழகான சிறுகதை. இது போல் நிறைய எழுத என் வாழ்த்துக்கள்.
தேசிகன்

8:03 PM, November 22, 2004

அன்பு said...
ஒருநாளைக்கு 24 மணிநேரத்துக்கும் அதிகமாக தற்போது தேவைப்படுவதால் வலைப்பதிவு பக்கம் வர இயலவில்லை. இன்று ஏதோ ஒன்று உங்களின் இந்த பக்கத்துக்கு இழுத்துவந்து விட்டது.

இந்த பதிவு முடியும்வரை இதை உங்களின் நினைவலைகள் என்றுதான் படித்துவந்தேன். பின்னூட்டங்களை பார்த்தபிறகுதான் இது கதை என்று தெரிய வந்தது. இது எதுவாக இருந்தாலும் இனிமையாக, சிறப்பாக இருந்தது. நன்றி.

வெகுண்டுவை படிப்பில் மக்கு என்று கூற இயலாது. 'மஹாமக்கு' என்று தான் சொல்ல வேண்டும். ஏனோ தெரியவில்லை. சரஸ்வதி தேவி தன் கடாட்சத்தை அவன் பக்கம் திருப்ப மறந்தே போனாள். அவனை 'வெகுண்டு'

என் தாத்தா சாதாரணமாகவே ஒரு விஷயத்தை 2 தடவை கூறுவார். படிப்பு சம்பந்தப்பட்டதை, 4 முறை அழுத்தமாகக் கூறுவார்!

'பொய் உரைத்த வாய்க்கு போஜனம் கிடைக்காது' என்பார்கள். நானோ வெகுண்டுவிடம் போஜனம் வாங்கி உண்டதால், பொய் சொல்லும் நிலைக்கு ஆளானேன்! இந்த வரிகளெல்லாம் சுஜாதா சாருக்கேயுரிய லொள்ளு பாஷை, அது உங்களுக்கும் கூடி வருகிறத. மிகவும் ரசித்து சிரித்தேன்.

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

9:07 AM, November 24, 2004

enRenRum-anbudan.BALA said...
அன்பு,
உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒரு முறை, ஒரு பின்னூட்டத்தில் நீங்கள் தேசிகனிடம், என்னுடைய ஒரு பதிவை எப்படி சிறுகதையாக மாற்றுவது என்று கேட்டிருந்தீர்கள்!!! அந்த விஷயத்தை ஒரு உந்துதலாகக் கொண்டு கஷ்டப்பட்டு, நீங்கள் இஷ்டப்படும் வகையில் கதை என்று ஒன்றை எழுதி பதிப்பித்தேன். வாழ்த்துக்களுக்கு நன்றி.
என்றென்றும் அன்புடன்
பாலா

8:42 PM, November 24, 2004
**************************************

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

Saturday, December 08, 2007

Star22a. GCT தோழனுக்கு ஒரு மடல்! (மீள்பதிவு)

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

எனது GCT கல்லூரி குறித்த "மலரும் நினைவுகளை" என் ப்ரியத்துக்குரிய, நான் மிகவும் மதித்த, நண்பனான ப்ரீதமுக்கு (4 பதிவுகளாக) எழுதிய கடித வடிவில் பகிர்ந்து கொண்டுள்ளேன் ! நான் எழுதிய 'நாஸ்டால்ஜியா' பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தவை இத்தொடர் பதிவுகள்! உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் !

இவற்றை வாசித்த பின், உங்கள் கல்லூரி நாட்கள் குறித்த Nostalgic நினைவலைகளில் நீங்கள் மூழ்கி நீந்த வேண்டும் என்பது தான் எனது நோக்கம்! ஏதாவது ஒரு வகையில், வாசகர்களாகிய உங்களது மெல்லிய உணர்வுகளில் ஒரு சிறிய அதிர்வை, இந்த வாசிப்பு ஏற்படுத்தக் கூடும் என்று நினைக்கிறேன் !

வரிசைக் கிரமமாக வாசிக்கவும். பின்னூட்டம் இட விரும்பினால், அந்தந்தப் பதிவுகளில் பின்னூட்டம் இடவும். இப்பதிவில் இட வேண்டாம்! நன்றி.

GCT தோழனுக்கு ஒரு மடல் - பாகம் 1

GCT தோழனுக்கு ஒரு மடல் - பாகம் 2

GCT தோழனுக்கு ஒரு மடல் - பாகம் 3

GCT தோழனுக்கு ஒரு மடல் - பாகம் 4


எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

என்றென்றும் அன்புடன்
பாலா

Star 21. வடக்கு நோக்கி என் முதல் பயணம் - A Tale of Twists

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

பொறியியற் படிப்பு முடித்தவுடன், பெங்களூரில் பணி புரிந்து வந்தேன். அப்போது ONGC நிறுவனத்திலிருந்து வேலைக்கான நேர்முக அழைப்பு என் சென்னை முகவரிக்கு வந்தது, அதற்கான எழுத்துத் தேர்வு நடந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு! நான் பெங்களூரில் நல்ல வேலையில் இருந்ததால், மும்பை / டில்லி போன்ற இடங்களுக்கு பணி நிமித்தம் செல்வதில் என் அன்னைக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. நேர்முகத் தேர்வோ டேராதூன் (Dehradun) என்ற இடத்தில். இது நடந்தது 1987 ஜனவரியில்.

எனக்கு நேர்முகத் தேர்வுக்கான கடிதம் வந்திருக்கிற விஷயம் கடைசி நிமிடத்தில் தான் எனக்குத் தெரிய வந்தது. அது கூட, என் சித்தி என் அன்னையிடம், 'ஒரு தேர்வுக்கோ அல்லது வேலைக்கோ செல்லலாமா/வேண்டாமா என்பதை உன் மகனே முடிவு செய்வது தான் சரியாக இருக்கும். இப்போது இதை நீ மறைத்து விட்டு, பின்னால் தெரிய வந்தால் அவன் ரொம்ப வருத்தப் படுவான். ONGC ஒரு பெரிய கம்பெனி, அவனுக்கு ·போன் போட்டு சொல்லி விடு' என்றெல்லாம் அறிவுறுத்திய பிறகு.

புதிதாக வேலையில் சேர்ந்திருந்த நான், என் மேலாளரிடம் கெஞ்சிக் கூத்தாடி லீவு பெற்று, பெங்களூரிலிருந்து சென்னைக்கு விரைந்தேன். அன்றிரவே தில்லிக்கு ரயில் பிடித்தால் தான் நேர்முகத் தேர்வுக்கு செல்ல முடியும் என்ற சூழ்நிலை! நான் அது வரை வடக்குப் பக்கம் தலை வைத்து படுத்தது கூட கிடையாது. என் உறவினர் ஒருவர் மூலம் எமெர்ஜன்ஸி கோட்டாவில் டிக்கெட் வாங்கி (இதற்காக அலையோ அலை என்று காலையிலிருந்து மதியம் வரை அலைந்தேன்!), என் ஒன்று விட்ட சகோதரன் ஒருவனின் தில்லி முகவரியை கஷ்டப்பட்டு கண்டுபிடித்து, அவனுக்கு நான் டில்லி வருவதாக ஒரு டெலிகிராம் கொடுத்து விட்டு மாலை தான் வீட்டுக்கு வந்தேன். அரக்க பரக்க தேவையானவற்றை ஒரு பெட்டியில் அடைத்துக் கொண்டு, கடவுளை வணங்கி விட்டு இரயில் நிலையத்திற்குப் புறப்பட்டேன். என் அம்மாவின் முகத்தில் கவலை ரேகைகள் தெரிந்ததைப் பற்றி கவலைப்பட எனக்கு நேரமில்லை!!!

கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் பயணம், இரயிலில் ஏறி அடுத்த நாள் இரவு வரை ஜாலியாகவே அமைந்தது. ஒரு தூத்துக்குடி காங்கிரஸ்காரர், ஒரு மிலிட்டரிக்காரர், இரு இளைஞர்கள் ஆகியோருடன் அரட்டை அடித்தபடி பொழுது இனிமையாகவே கழிந்தது. முன்னிரவிலிருந்து (ஆக்ரா நெருங்குவதற்கு முன்பாகவே!) குளிர் நடுக்கத் தொடங்கியது ! ஸ்வெட்டரும் இல்லாமல், சரியான போர்வையும் இல்லாமல் உடம்பு ஒரு மாதிரி விறைத்து விட்டது ! பொட்டுத் தூக்கம் இல்லை; இரயில் நிறுத்தங்களிலெல்லாம், மண் கோப்பைகளில் கிடைத்த சூடான தேநீர் அருந்தினேன். வாழ்க்கையில் நான் சந்தித்த முதல் கடுங்குளிரின் தாக்கம் மறக்கவே முடியாதது !!!

என் சகோதரன் தில்லி இரயில் நிலையத்திற்கு வரவேண்டுமே என்ற ஓர் எண்ணம் தான் மனது முழுவதும். வரவில்லையென்றால், அவன் முகவரி தேடி குளிரில் அலைய வேண்டுமே என்ற கவலை வேறு. என் நல்ல நேரம், இரயில் நிலையம் வந்திருந்த அவன், சிரித்தபடி ஸ்வெட்டர் ஒன்றைத் தந்து, "நீ எடுத்து வரமாட்டாய் என்று எனக்குத் தெரியுமே!" என்றான். அதை அணிந்தபின் தான், பற்களின் ஆட்டம் நின்று, பேச்சே வந்தது !!! அடுத்த நாள் நேர்முகத் தேர்வு என்பதால், அன்று மாலையே டேராதூனுக்கு பேருந்தில் பயணம் மேற்கொண்டேன்.

அச்சமயம், கல்லூரி நண்பன் ஒருவன் டேராதூனில் அவனது நிறுவன பயிற்சிக்காகத் தங்கியிருந்தான். அவன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து சென்றபோது, அவன் ஊர் சுற்றப் போயிருந்தான். திபெத்தியன் சந்தையை ஒரு ரவுண்ட் அடித்து, ஒரு நல்ல ஸ்வெட்டரை வாங்கிக் கொண்டு, அவனுக்காகக் காத்திருந்து அந்த திருவாழத்தானை இரவு பத்தரை மணிக்குத் தான் பார்க்க முடிந்தது. அது அவன் நிறுவன விடுதி என்பதால், இரவு நான் அங்கே தங்க இயலாது என்று கவுத்து விட்டான். நண்பன் கொஞ்சம் மப்பில் இருந்தாலும், என்னுடன் வந்து சாப்பாடு வாங்கிக் கொடுத்து ஏதோ ஒரு பாடாவதி லாட்ஜில் நான் தங்க ஏற்பாடு செய்து விட்டுப் போய் விட்டான்.

எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியில் லாட்ஜ் மேற்பார்வையாளரிடம் என்னை காலை ஆறரை மணிக்கு (எட்டு மணிக்கு நேர்முகத் தேர்வு) எழுப்புமாறு கூறிவிட்டு உறங்கச் சென்றேன். காலையில் விழிப்பு வந்து மணி பார்த்தால், ஏழு ஐம்பதைக் காட்டியது ! என் ஹிந்தி அறிவை நொந்தபடி, பல் மட்டும் துலக்கி விட்டு, ஓர் ஆட்டோ பிடித்து தேல்பவன் (ONGCயின் தலைமை அலுவலகம்) நோக்கி விரைந்தேன்!

**********************************************
ஆட்டோவுக்கு பணம் கொடுக்கும்பொது தான், தங்கிய லாட்ஜின் பெயரையோ, அது இருந்த இடத்தின் பெயரையோ கவனிக்கத் தவறியது சுள்ளென்று உரைத்தது. என்னுடைய பெட்டியை அந்த லாட்ஜின் அறையில் விட்டு வந்திருக்கிறேனே ? ஆட்டோக்காரரின் கையைத் தடவி, "முஜே, அபி ஆயா, ஹைனா, கிதர்ஸே ?" என்றவுடன் அவர் பார்த்த பார்வையே, 'என்ன மாதிரி கிறுக்கன்டா இவன் ? இவன் எங்கேயிருந்து வந்தான்னு நம்மை ஏன் கேக்கறான் !' என்றது. நான் விடாமல், மறுபடியும், "பாய்சாப், ஹமாரா ஹோட்டல் கா நாம் க்யா ஹை ?" என்றவுடன், 'நான் சற்று மரை கழண்ட கேஸோ' என்ற அவருக்கிருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் போய் விட்டது ! "முஜே கோயி ஹோட்டல் கா நாம் நஹி மாலும், சம்ஜா ?" என்று கடுப்பினார் ! ஒரு பத்து நிமிடங்கள் போராடி, நான் என்ன கேட்கிறேன் என்று புரிய வைத்து (அல்லது அவருக்கு புரிந்து!) 'ஐயோ பாவமே ! இதைக் கேட்கவா இவ்வளவு சிரமப்பட்டாய் ?' என்பது போல் கனிவாகப் பார்த்து, நான் தங்கியிருந்த லாட்ஜின் பெயரைக் கூறினார். லாட்ஜின் பெயரைக் குறித்துக் கொண்டு, அவருக்கு சுக்ரியா சொல்லி, ஆனந்தக் கண்ணீர் விட்டேன் ! (இப்ப சொல்லுங்க, ஹிந்தி தெரிஞ்சா நல்லது தானே :))

நல்ல வேளை, தேர்வுக்கு வந்தவர்களின் பட்டியலில் எனக்கு முன் பலர் இருந்ததனால், என் முறை வர மதியம் ஆனது. தேர்வுக்கு வந்திருந்த ரூர்க்கி பல்கலைக்கழகத்தில் பயின்ற ஒரு பெண்ணுடன் 'கடலை' போட்டு விட்டு , நேர்முகத் தேர்வை சிறப்பாகவே எதிர்கொண்டு, புதுத் தோழிக்கு பிரியா விடை கொடுத்து விட்டு, மாலை லாட்ஜுக்கு வந்து பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி, தில்லிக்கு எந்த மார்க்கமாகப் போகலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, மற்றொரு கல்லூரி நண்பன் அதிசயமாக கண்ணில் பட்டான். அவனும் ஏதோ வேலை விஷயமாகத் தான் டேராதூன் வந்திருந்தான். இருவருக்குமே தில்லி பயணத்திற்கு, துணைக்கு ஆள் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. மகிழ்ச்சியைக் கொண்டாடவும், இரவுக்குளிரை எதிர்கொள்ளவும் உற்சாக பானம் ! தில்லி செல்லும் இரவு இரயிலில் ஏறி, அரட்டை அடித்தபடி ஜாலியாகப் பொழுதைக் கழித்தோம் !

அடுத்த நாள், தில்லியை அடைந்து அன்று முழுதும் (இரவு இரயிலில் சென்னை கிளம்பும் வரை) தில்லியை சுற்றிப் பார்க்கலாம் என்ற முடிவு செய்து, பிரகதி மைதான் பக்கம் திரிந்து கொண்டிருந்தபோது, கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸில் சந்தித்த தூத்துக்குடி காங்கிரஸ்காரர் என்னைப் பார்த்து விட்டார். "தம்பி, வாங்க, வாங்க, போயிட்டே பேசுவோம்" என்று என்னைக் கூட்டிக் கொண்டு ஆட்டோவில் பயணப்பட்டார். "தேர்வில நல்லா பண்ணீகளா ?" என்று அன்பாக வினவினார். "இப்போ ஒருத்தரை ஒங்களுக்கு அறிமுகம் செஞ்சு வைக்கிறேன், பாருங்க!" என்று புதிர் போட்டபடி, காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, திரு.G.K.மூப்பனார் முன் நிறுத்தி விட்டார் !!! மூப்பனார் அவர்கள் சக்தி வாய்ந்த ஒரு காங்கிரஸ் தலைவராக இருந்த காலம் அது.

மூப்பனார் அவர்கள், தூத்துக்குடிக்காரரிடம் சற்று நேரம் பேசி விட்டு, 'பையன் யாரு ?' என்று வினவ, இவர். "தெரிஞ்ச புள்ளைங்க ! என்ஜினியரிங் முடிச்சுட்டு, ONGC-லே இன்டர்வியூக்காக வந்திருக்காப்ல" என்றவுடன், மூப்பனார் இரண்டொரு வார்த்தைகள் என்னிடம் பேசிவிட்டு, இருவருக்கும் விடை கொடுத்தார். அது தான், நான் மூப்பனாரை என் வாழ்வில், முதலும் கடைசியுமாக நேரில் பார்த்தது.

அன்று, குடியரசு தின ஊர்வலத்தின் ஒத்திகையை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்றிரவே, அதே கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸில் பயணம் மேற்கொண்டு, ஒரு வழியாக சென்னையின் வெப்பத்திடம் மீண்டும் தஞ்சம் அடைந்தேன்! அதன் பிறகு, என் வாழ்வில் பல இடங்களுக்கு (உள்நாடு/வெளிநாடு என்று) பயணம் மேற்கொண்டிருந்தாலும், நான் most exciting trip என்று கருதுவது, 'பயமறியா இளங்கன்றாக' நான் மேற்கொண்ட இந்த டில்லி/டேராதூன் பயணத்தை தான்! என் வாழ்வின் மறக்கவே முடியாத பிரயாணமும் கூட !!!


எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்
என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, December 06, 2007

Star13. ஒரு நண்பனின் கதை இது!

எனது மற்ற நட்சத்திர வாரப் பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

எனது, 15 ஆண்டுகள் நண்பனான சிவராமனைப் பற்றி எழுத வேண்டும் என்று ஏதோ ஒரு உந்துதல்!

சிவராமன் என் தம்பிக்குத் தான் முதலில் நண்பனானன். 1991 என்று ஞாபகம், அவனை என் தம்பி வீட்டுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தினான். குடும்பச்சூழல் காரணமாக (சிவராமனுக்கு அப்பா கிடையாது) பன்னிராண்டவது வகுப்பு முடிந்தவுடனேயே அம்பத்தூரில் ஏதோ ஒரு கெமிக்கல் கம்பெனியில் வேலைக்குப் போனவன். என்னைச் சந்தித்த வந்தபோது அவனுக்கு வயது 21.

சிவராமன் தினமும் காலையில் சீக்கிரம் வேலைக்குப் போக வேண்டியிருந்ததால், ஒரு ஸ்கூட்டர் வாங்குவதற்கு என் தம்பி வங்கியில் கடன் ஏற்பாடு செய்து விட்டு, அதற்கு கியாரண்டி கையெழுத்து வேண்டி தான் என்னிடம் அழைத்து வந்தான். சாதாரணமாக தெரிந்தவர்களுக்கே, யோசித்துத் தான், நான் கியாரண்டி கையெழுத்து போட உடன்படுபவன். என்னமோ சிவராமனை பார்த்தவுடன் பிடித்துப் போய், கடன் பத்திரத்தில் உடனே கியாரண்டி கையெழுத்து போட்டுக் கொடுத்து விட்டேன்!

சிவராமன் பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் வலம் வர ஆரம்பித்தான். அவன் பாசமாகப் பழகுவான், உதவி என்றால் ஓடி வந்து செய்து கொடுப்பான். என்ன, கொஞ்சம் பிடிவாதக்காரன், அதனால் தன் தவறை லேசில் ஒப்புக் கொள்ள மாட்டான். ஆனால், நண்பர்கள் நாங்கள் அதை பெரிதுபடுத்த மாட்டோம்.

சிவராமன் கடின உழைப்பாளி. கெமிக்கல் தொழில் குறித்து சீக்கிரமே நல்ல புரிதல் பெற்று விட்டான். தனது 6 வருட வேலையை தைரியமாக உதறிவிட்டு, தன் அனுபவத்தின் மேல் நம்பிக்கையோடு, சிறிய அளவில் பிஸினஸ் ஆரம்பித்தான். அம்பத்தூரில் ஒரு கொடவுன் தான் அவன் கம்பெனி. ஆரம்பத்தில், அவனே முதலாளி, கெமிக்கல் தயாரிக்கும் / சப்ளை செய்யும் தொழிலாளி, மார்க்கெட்டிங் நிர்வாகி ஆகிய எல்லா வேடங்களையும் ஏற்று கடினமாக உழைத்தான்.

ஒரு 5 வருடங்களில், அம்பத்தூரில் சொந்தமாக வாங்கிய இடத்தில் கொடவுன்/ஆபிஸ் அமைத்தான். அவனிடம் 8 பேர் வேலை பார்த்தனர். அதோடு, கம்பெனிக்கென 2 பைக், சப்ளைக்கு ஒரு மாருதி வேன் என்று சிவராமனின் பிஸினஸில் நல்ல முன்னேற்றம். கையிலும் நிறைய பணம் புரள ஆரம்பித்தது. நண்பர்களிடம் பண விஷயத்தில் தாராளமாக இருப்பான், நிறைய பேருக்கு உதவியும் செய்து இருக்கிறான்.

சிவராமனின் பிடிவாதம் மெல்ல மெல்ல கர்வமாக மாறிய காலமது! எங்கள் நண்பர்கள் வட்டத்தில் நேரம் செலவிடுவதை குறைத்துக் கொண்டு, வேறு சில கூடா நட்புகளைச் சேர்த்துக் கொண்டான். எப்போதாவது குடித்தவன், அடிக்கடி குடிக்க ஆரம்பித்தான். மாதத்துக்கு 2 முறை நடுபழனியில் உள்ள கோயிலுக்குச் செல்வான். 'என்னடா அங்க' என்று கேட்டால், யாரோ சித்தரைப் பார்க்கப் போகிறேன் என்பான். பிசினஸில் நன்றாகப் போய்க் கொண்டிருந்தாலும், அவனுக்குத் தெரியாமல் பலரால் ஏமாற்றப்பட்டான்! அவன் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை! ஆனாலும், வாழ்க்கையை ஒரு ராஜா மாதிரி அனுபவித்தான், பார்க்கவும் ராஜா மாதிரி தான் இருப்பான்!

எப்போது, எங்கிருந்து கஞ்சா புகைக்கும் பழக்கம் அவனைத் தொற்றிக் கொண்டது என்பது எங்கள் நண்பர்கள் யாருக்கும் தெரியாது. 'ஏண்டா இப்படி?' என்றால், 'எப்பயாவது தான்'என்று சமாளிப்பான். அந்த காலகட்டத்தில், அவனுக்கு ஒரு பொறியியற் கல்லூரி மாணவியுடன் காதல் ஏற்பட்டது. இவனது பழக்கங்கள் தெரிந்தே அந்தப் பெண் இவனைக் காதலித்தது, என்ன எழவு காதலோ?

சிவராமன் குடித்து விட்டு வண்டி ஓட்டி, அடிக்கடி ஏதாவது விபத்தில் சிக்கிக் கொண்டு எங்களில் யாருக்காவது ·போன் வரும். இரவு/பகல் என்று ·போன் எப்பொழுது வேண்டுமானாலும் வரும்! போய் மீட்டுக் கொண்டு வருவோம், வேற வழி!? விபத்து என்பது அவனுக்கு சர்வ சாதாரணமான விஷயம். இருமுறை, பெரிய விபத்திலிருந்து உயிர் தப்பியும், நாங்கள் சொல்வதைக் கேட்கமாட்டான். அனாவசியச் செலவுகளில் ஏராளமாக பணம் போயிற்று. எங்கள் ஏரியாவை காலி செய்து கொண்டு, அண்ணாநகர் பக்கம் வீடு பார்த்துக் கொண்டு போய் விட்டான். எங்களுக்கும் அவனுக்கும் இடையே போக்குவரத்து குறைந்து போனது.

காதலித்த பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்டு கொஞ்ச நாள் நல்லபடி இருந்தான். ஒரு பெண் குழந்தை பிறந்தது. மீண்டும் மெல்ல பழைய (குடி/கஞ்சா) பழக்கங்கள் பக்கம் திரும்பினான். பிசினஸ் நொடிக்க ஆரம்பித்தது. வீட்டில் ஓயாத சண்டை. அந்தப்பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு, தன் அம்மா வீட்டுக்குப் போய் விட்டது. ஒரு கட்டத்தில், கடன்காரர்கள் நெருக்க ஆரம்பிக்கவே, இன்சால்வன்ஸி கொடுத்து, பிசினஸை இழுத்து மூட வேண்டியதாயிற்று.

அவனது குடும்பமே அவனை கைவிட்டது! எங்கள் ஏரியாவில் ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து, ஏதோ ஒரு சின்ன கம்பெனியில் வேலைக்குப் போய் வந்தான். ஆனால், அவனது கெட்ட பழக்கங்களை விட முடியவில்லை, நண்பர்கள் நாங்கள் இரண்டு,மூன்று முறை சிகிச்சைக்குக் கூட்டிச் சென்றோம். கொஞ்ச நாள் மருந்து சாப்பிட்டு ஒழுங்காக இருப்பான், மீண்டும் பழைய பல்லவி! எங்களுக்கும் குடும்பம் / வேலை என்றிருக்க, அவனுக்காக எவ்வளவு நேரம் ஒதுக்க முடியும் ?

ஒரு கட்டத்தில், எங்கள் வீடுகளுக்கு வருவதை நிறுத்திக் கொண்டான். எப்போதாவது சாலையில் பார்த்தால், சின்ன விசாரிப்பு, அத்தோடு சரி. போதைப் பழக்கத்தாலும், மனைவி/குழந்தையைப் பிரிந்த மனவேதனையாலும், ஆளே உருக்குலைந்து போய் காணப்பட்டான். இந்தச் சூழலில் தான், இன்னொரு நண்பன் ஒரு நாள், ஓர் அதிர்ச்சித் தகவலோடு வீட்டுக்கு வந்தான்.

ஒரு பெண்ணின் சங்கிலியை அறுத்து, சிவராமன் போலீசாரால் கைது செய்யப்பட்டு, அப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக அந்த நண்பன் கூறியதைக் கேட்டு பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டது! அந்த செய்தி பேப்பரிலும் வந்திருந்ததைக் காட்டினான். நிச்சயம் சிவராமன் திருடியிருக்க மாட்டான் என்று நான் நம்பினேன். நண்பர்கள் நாங்கள் ஒரு வக்கீலைப் பார்த்து, பெயிலில் அவனை வெளிக் கொண்டு வர 15 நாட்கள் ஆயிற்று.

என் தம்பி கூட்டி வர, தயங்கியபடி என்னைப் பார்க்க வந்தான். 'என்ன தான் நடந்தது?' என்று கேட்டேன். அன்று போதை மயக்கத்தில் சிவராமன் சாலையில் நடந்து சென்றபோது, யாரோ ஒருவன் முன்னால் சென்று கொண்டிருந்த பெண்ணின் செயினை அறுத்து ஓடி வர, அந்தப் பெண் அலற, அந்தத் திருடன் செயினை சிவராமன் அருகே போட்டு விட்டு ஓடி விட்டான். கொஞ்சம் கூட்டமும் கூடி விட்டிருந்தது. செயினை குனிந்து எடுத்த சிவராமனை திருடன் என்று முடிவு கட்டி போலீசிடம் ஒப்படைத்து விட்டனர். போதையின் வசம் இருந்ததால், இவன் பேச்சு எடுபடவில்லை.

புழல் சிறைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னால், இரண்டு நாள் லாக்கப்பில் நிறைய அடிபட்டதாகவும், அதனால் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அவன் கூறியபோது, என் கண்கள் கலங்கி விட்டன. ராஜாவைப் போல் வாழ்ந்தவனுக்கு திருட்டுப் பட்டம்! லாட்ஜ் ரூமை காலி செய்து விட்டு அவனது தங்கை வீட்டில் கொஞ்ச நாள் இருக்குமாறு கூறியதை ஏற்றுக் கொண்டான். ரூம் வாடகையை செட்டில் பண்ணக் கூட கையில் பணமில்லை என்றபோது, மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. தேவையான பணத்தைக் கொடுத்தேன்.

பெயிலில் வெளிவந்ததால், தினமும் காவல் நிலையத்தில் சிவராமன் கையெழுத்து போட வேண்டியிருந்தது. இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை என்னையும், என் தம்பியையும் பார்க்க வருவான். தன் வாழ்க்கை சீரழிந்து போனதைச் சொல்லி கொஞ்சம் புலம்புவான். திருடியதாக பேப்பரில் செய்தியோடு புகைப்படமும் வெளி வந்ததால், தனக்கு இங்கே மறுபடி எந்த வேலையும் கிடைக்காது என்பான், தன் அண்ணன் இருக்கும் தில்லிக்குப் போய் வேலை தேடப் போகிறேன் என்பான், இரவில் தூக்கமே வருவதில்லை என்பான். பார்க்க பரிதாபமாய் இருக்கும். 'கொஞ்சம் பொறு, ஏதாவது செய்யலாம்' என்று ஆறுதல் கூறுவோம்.

வெளியில் வந்து, 4 வாரங்கள் கஞ்சா/குடி பக்கம் போகாமல் தான் இருந்தான். ஆனால், தங்கை வீட்டில் இருப்பு கொள்ளாமல், மற்றொரு நண்பரின் உதவியோடு, மீண்டும் ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்க ஆரம்பித்தது, எனக்குத் தெரியாது. வேலையில் கொஞ்சம் பிஸியாக இருந்து விட்டேன். ஆனால், சிவராமனை மனநல மருத்துவரிடம் ஒரு முறை அழைத்துச் செல்ல வேண்டுமென்று என்று என் தம்பியிடம் ஒரு முறை சொன்னேன்.

சிவராமன் மீண்டும் லாட்ஜுக்கு சென்ற ஐந்தாவது நாள் (ஒரு ஆறு வாரங்களுக்கு முன்) அவன் தூக்கு போட்டுக் கொண்டு செத்துப் போய் விட்டதாக தகவல் வந்தது! ராயப்பேட்டை மருத்துவமனையில் அறுத்து கொடுக்கப்பட்ட, ஊதிப்போன அவனது உடலை மயிலாப்பூர் இடுகாட்டில் தீக்கிரையாக்கியபோது, என் மனதில் வேதனையை விட ஒரு வித அமைதியைத் தான் உணர்ந்தேன். அவன் மனைவி அவன் சாவுக்குக் கூட வரவில்லை! சிவராமன் தன் சஞ்சலத்திலிருந்தும், துயரத்திலிருந்தும் விடுதலை அடைந்து விட்டதாகத் தான் எனக்குத் தோன்றியது! ஆனால், அவனை மருத்துவரிடம் சற்று முன்னதாகவே கூட்டிச் செல்லாமல் விட்டு விட்டோமே என்ற குற்ற உணர்வு மட்டும் என்னை உறுத்திக் கொண்டு தான் இருக்கிறது :(

சிவராமனை மாமா ஸ்தானத்தில் வைத்து என் மூத்த மகளை அவன் மடியில் அமர்த்தி, அவளுக்கு முதல் மொட்டை போட்டதும், ஒரு முறை என் குடும்பத்தோடு கொடைக்கானல் சென்றபோது, சிவராமனும் கூட வந்து எங்களோடு செலவிட்ட சந்தோஷமான நாட்களும், ஏதோ இப்போது தான் நடந்தது போல் இருக்கிறது!

என்றென்றும் அன்புடன்
பாலா

பி.கு: பதிவில் நண்பனின் பெயர் மாற்றப்பட்டுள்ளது!


எனது மற்ற நட்சத்திர வாரப் பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

Friday, April 13, 2007

331. விசித்திர திகில் அனுபவங்கள் (அ) சம்பவங்கள் - தொடர் சங்கிலி

தேசிகனின் இந்தப் பதிவை வாசித்தவுடன், என் ஞாபகத்தில் பளீரிட்ட 1/3 டஜன் அனுபவங்களை (என்னுடையது அல்ல!) பகிர்ந்து கொள்கிறேன்.

1. அபிராமி, அபிராமி!

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் (எழுபதுகளில்), அபிராமி தியேட்டரில் (என்று நினைக்கிறேன்) லிசா என்ற மலையாளப் பேய்ப்படம் திரையிடப்பட்டது. அப்போது நடைபெற்றதாகக் கூறப்படும் திகில் சம்பவம் (புரளியா என்று தெரியாது!) நன்றாக இன்னும் நினைவில் உள்ளது. அதைக் கூறி, இரவு வேளைகளில் பலரை பயமுறுத்தி இருக்கிறேன்.

அந்தப் படத்தை நைட்ஷோ பார்க்க சென்றிருந்த இரண்டு இளம் சகோதரர்களில் ஒருவருக்கு படம் ஓடிக் கொண்டிருந்தபோது அவசரமாக "அது" (படக்காட்சிகள் ஏற்படுத்திய கிலியில்) வர, டாய்லெட்டுக்கு ஓடினார். டாய்லெட்டில் யாரும் இல்லை. இயற்கை உபாதையை சரி செய்து கொண்டு, கை அலம்பும்போது, மேலேயிருந்து தலையில் ஏதோ சொட்டவே, மேலே பார்த்தவர், சப்தநாடியும் ஒடுங்கிப் போய் விட்டார். உத்திரத்தில் ஒரு பிளவிலிருந்து ஒரு மனிதக் கை, ரத்தம் சொட்ட, தொங்கிக் கொண்டிருந்தது.

பீதியான அவர், இருக்கைக்கு வந்து, தன் சகோதரரிடம் மேட்டரை ரகசியமாகக் கூறி, தனக்கு மிகவும் பயமாக இருப்பதாகவும், உடனே கிளம்ப வேண்டும் என்றும் கூறினார். "வா, அது என்னவென்று பார்த்து விட்டு, தியேட்டர் மேனேஜரிடம் கம்பிளெயிண்ட் பண்ணலாம்" என்று அடுத்தவர் கூறியதற்கு, "கை"யைப் பார்த்தவர், "அதெல்லாம் வேண்டாம், நம்மைக் குடைந்து விடுவார்கள், சீக்கிரம் போகலாம்" என்று அவரை இழுத்துக் கொண்டு வெளியே வந்தவரை பார்த்து, தியேட்டர் வாட்ச்மேன், " என்ன, தம்பிகளா, படம் பார்க்க பயமா இருக்கா, இந்த மாதிரி படத்துக்கெல்லாம் சின்னப்பசங்க நைட்ஷோ வரலாமா?" என்று விவரம் புரியாமல் கடுப்படித்தார்.

சாலை இருட்டாக இருந்தது. சாலை ஓரத்தில் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் அதன் ஓட்டுனர் முக்காடு போட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பி, "நாங்க எக்மோர் போகணும் வரீங்களா?" என்றவுடன் அவர் குளிருக்கு முண்டாசு கட்டிக் கொண்டு, போட்டிருந்த ஜிப்பாவை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டு, "போகலாங்க, ஒரு 10 ரூபாய் கொடுத்துடுங்க" என்றார்.

கொஞ்ச தூரம் ரிக்ஷா போனவுடன், ரிக்ஷாக்காரர் கரகரப்பான குரலில், "என்ன தம்பிகளா ? பாதிப் படத்துலேயே வந்துட்டீங்க போல தெரியுது, ஏதாவது சீன் பார்த்து பயந்துட்டீங்களா?" என்று கேட்கவே, இளவயசுக்காரர், தான் டாய்லெட்டில் பார்த்ததை விலாவாரியாகக் கூறியவுடன், திரும்பிய ரிக்ஷாக்காரர், "இந்தக் கையா, பாருங்க?" என்று ஜிப்பாவிலிருந்து தன் இடது கையை உருவிக் காட்டினார், ரத்தம் தோய்ந்த டாய்லெட்டில் பார்த்த அந்தக் கை போலவே! ரிக்ஷாக்காரருக்கு, முகம் இருக்க வேண்டிய இடத்தில், ஒரு கருப்பு வட்டம் மட்டுமே இருந்தது!!!!

குலை நடுங்கிப் போன சகோதரர்களில் ஒருவர், ஸ்பாட்டிலேயே அவுட்! இந்த சம்பவம் உண்மையிலே நடந்ததா என்றெல்லாம் நான் இதுவரை செக் பண்ணவில்லை!

2. லாலி ரோட் to GCT

கல்லூரியில் படித்த காலத்தில், இரண்டு அம்மாஞ்சிகள் (சந்திரசேகர், பத்து என்ற பத்மநாபன்) என் கூடப் படித்தார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட திகில் அனுபவம் இது. செவ்வாய் கிழமைகளில் ஹாஸ்டல் மெஸ்ஸில் ghee rice என்ற வாசனை (நாற்றம்!) மிக்க உணவு ஒன்றை டின்னருக்கு வழங்குவார்கள். சந்திராவுக்கும், பத்துவுக்கும் அது ஆகவே ஆகாது. அன்று, இருவரும், ரத்ன விநாயகர் கோயிலுக்கு அருகே உள்ள அன்னபூர்ணா சென்று ஒரு வெட்டு வெட்டி விட்டு (Dutch முறை தான்!) காலாற ஆர்.எஸ்.புரத்திலிருந்து நடந்து வருவார்கள்.

லாலி ரோடு ஜங்ஷன் என்ற நாற்சாலை சந்திப்பிலிருந்து (ஒரு பக்கம் போனால் GCT, இன்னொரு பக்கம் போனால் மருதமலை) GCT கல்லூரி வரை செல்லும் சாலையில், தெரு விளக்குகள் இல்லாததால், மரங்கள் அடர்ந்து இரவு வேளைகளில் இருட்டாக இருக்கும். ஒரு சமயம், இரவு மணி பத்து இருக்கும். அன்னபூர்ணாவில் டின்னர் முடித்து விட்டு, பயத்தைப் போக்க கந்தசஷ்டி கவசம் சொல்லிக் கொண்டே, இருவரும் 'லாலி ரோடு to GCT' நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, பின்னால் ஏதோ ஆளரவம் கேட்டது. அமாவாசையால் கும்மிருட்டு வேறு. பத்து, "யாரது?" என்று வினவ, ஒரு கிழவியின் குரல், "தம்பிகளா, நான் ஸ்ரீவள்ளி டாக்கீஸ் கிட்ட போகணும், கொஞ்சம் வழி சொல்லுவீங்களா?" என்றவுடன், பயம் தெளிந்த பத்து, "பாட்டி, இப்டியே நேரா, காலேஜ தாண்டிப் போனா, ஒரு டீக்கடை வரும். அங்க கேட்டா சொல்லுவாங்க" என்று கூறி விட்டு இருவரும் நடக்க மீண்டும் ஆரம்பித்தார்கள்.

பின்னாடியே கிழவியும் நடந்து வந்து கொண்டிருந்தாள்! சந்திராவுக்கு ஏதோ பொறி தட்ட(!), மிக வேகமாக நடக்கத் தொடங்கினான், பத்துவும் தான்! பின்னால் கிழவியும் மிக வேகமாக நடந்து வரும் அரவம் கேட்டபடி இருந்தது. இருவரும் பீதியடைந்து, முதலில் மெதுவாக பின்னர் வேகமாக ஓட ஆரம்பிக்க, பின்னால், கிழவியும் ஓடி வரும் அரவம் தொடர்ந்தது!!! தலை தெறிக்க ஓடிய இருவரும், கல்லூரி கேட் அருகில் இருந்த வெளிச்ச பிரவாகத்திற்கு வந்து, திரும்பிப் பார்க்க, பின்னால் யாரும் இல்லை!

இருவருக்கும் அடுத்த 2 நாட்கள் கடுமையான காய்ச்சல், கிளாஸ¤க்கு வரவில்லை. இந்த திகில் கதையை, பார்க்க வந்த எல்லாரிடமும் மாய்ந்து மாய்ந்து சொல்லி, நல்ல பிரபலம் அடைந்தனர் :)

3. தள்ளாதே! என்னைத் தள்ளாதே!

கல்லூரி நண்பன் ஷியாம் சுந்தர், கல்லூரி கிரிக்கெட் டீமின் கேப்டன், தைரியமானவனும் கூட! நாங்கள் தங்கி இருந்த விடுதியின் தரைத்தளத்தில் இருந்த இடது பக்க டாய்லெட் அறை ஒன்றில் பல வருடங்களுக்கு முன் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக ஒரு விஷயம் கேள்விப்பட்டதால், இரவு நேரத்தில், யாரும் அங்கு செல்ல மாட்டார்கள். விளக்கு வேறு கிடையாது.

ஷியாமின் அறை தரைத்தளத்தில் தான் இருந்தது. ஒரு நாள் காலை இரண்டு மணி வரை, engineering drawing போட்டு விட்டு, படுப்பதற்கு முன் சிறுநீர் கழிக்க (தூக்கக் கலக்கத்தில் மறந்து போய்) 'அந்த' டாய்லெட்டுக்கு செல்ல முற்பட்டான். உள்ளே நுழைந்தவனை யாரோ தள்ளி விட்ட மாதிரி இருந்தது. 'யாரோ வேண்டுமென்றே தள்ளி விடுகிறார்கள்' என்று எண்ணிய ஷியாம், "ஏய், தூக்கம் வருது, வெளயாடாதே" என்று சொல்லிக் கொண்டே, மீண்டும் உள்ளே நிழைய எத்தனித்தான், மீண்டும் ஒரு தள்ளு! கடுப்பான ஷியாம், "செருப்படி வாங்கப் போற" என்று கத்தியபடி, வேகமாக டாய்லெட்டில் நிழைய முற்பட, 'யாரோ' இன்னும் வேகமாக ஷியாமை தள்ளி விட, ஷியாம் டாய்லெட்டுக்கு வெளியே வந்து விழுந்தான்!!!

இப்போது ஷியாமின் சகலமும் விழித்துக் கொள்ள, தனது அறைக்கு ஓடிய ஷியாம், ஒரு 2 நாட்கள் எந்த டாய்லெட்டுக்கும் போகவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) மாவீரன் ஷியாமையே கதி கலங்க வைத்த "அது" குறித்த பேச்சு, கேம்பஸில் ரொம்ப நாட்கள் ஓடியது!!!

4. சொற்களில் சிக்காத பற்கள்!

என் கல்லூரி நண்பன் நாராயணன் (இவனது கீர்த்தி சிறியது, மூர்த்தி பெரியது, படிப்பு, விளையாட்டு, பேச்சுப்போட்டி என்று அனைத்திலும் கலக்குவான்!) தன் பங்குக்கு ஒரு "திகில்" கதை கூறினான். ஒரு சமயம், அவனது நண்பர்கள் இருவர், கோயமுத்தூரில் உள்ள பழைய ஸ்ரீநிவாஸா டாக்கீஸில், நைட் ஷோ பார்த்து விட்டு திரும்பிய போது, இருட்டான சாலையோரத்தில் (இரவு 2 மணிக்கு) ஒருவர் வேர்க்கடலை வறுத்துக் கொண்டிருந்தார்! நண்பன் ஒருவனுக்கு கடலை கொறிக்க ஆசை வரவே, வண்டி அருகில் சென்று, "ஒரு ரூபாய்க்கு கடலை கொடுங்க" என்று வாஞ்சையோடு வாணலியைப் பார்த்தவனுக்கு இதயமே நின்று விட்டது! வாணலியில் மணலோடு வறுக்கப்பட்டுக் கொண்டிருந்தவை மனிதப் பற்கள்!! அப்புறமும் நம் மக்கள் அங்கு நிற்பார்களா, எடுத்தார்கள் ஓட்டம், பின்னங்கால் பிடறியில் பட :)

Epilogue:

------------
நானும் என் பங்குக்கு "திகில்" அனுபவம் பெற, தைரியசாலி வேடமிட்டுக் கொண்டு, தன்னந்தனியாக வாடகை சைக்கிள் மிதித்துக் கொண்டு, கல்லூரிக்கு அருகே இருந்த முத்து டாக்கீஸ¤க்கும், சென்ட்ரல் தியேட்டருக்கும், பல முறை நைட் ஷோக்கள் சென்று வந்துள்ளேன்! படம் பார்த்து விட்டு, அகாலமான நேரத்தில் திரும்பி வரும்போது, சாலையோர முருங்கை மரங்களில் வேதாளமோ, புளிய மரங்களில் பேயோ/பிசாசோ தொங்குவதை ஒரு முறையேனும் பார்த்து விட்டால், நம் ஜென்மமும் 'திகில்' சாபல்யம் அடையுமே என்று ஏங்கி பரிதவித்தது தான் மிச்சம்!!! நைட் ஷோக்கள் போனதில், தூக்கமும் போச்சு, அந்த செமஸ்டரில் மார்க்கும் போச்சு :) நமக்கெல்லாம் எதுக்கும் கொடுப்பினை கிடையாதுங்க :))))


தங்கள் (அல்லது) தாங்கள் கேள்விப்பட்ட "திகில் அனுபவங்களை" பகிர்ந்து கொள்ள நான் அழைக்க விரும்பும் நண்பர்கள்:

1. தேசிகன்
2. பினாத்தல் சுரேஷ்
3. டோண்டு ராகவன்
4. ஹாய் கோபி
5. நாமக்கல் சிபி
6. உஷா ராமச்சந்திரன்

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 331 ***

Saturday, September 30, 2006

சிறு வயது சிந்தனைகள்-II


***** REPUBLISHED *****

என்னவோ தெரியவில்லை! நம்மில் பலருக்கு பழைய நினைவுகளை அசை போடுவதும், அதனால் ஏற்படும் அலாதியான மனமகிழ்ச்சியும் அடிக்கடி நிகழ்பவையாக உள்ளன. சகோதரி பத்மினி தன் தங்கைக்கு எழுதும் தொடர் கடிதங்களில், தன் சிறுவயது சம்பவங்களை நேர்த்தியாக பதிவு செய்துள்ளார். நமது Bloggers-இல் பலர், தங்கள் வலைப்பதிவுகளில், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், "அந்த நாளும் மறுபடி வாராதோ?" என்ற தொனியில் எழுதியிருக்கிறார்கள் என்றே கூறுவேன்.

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் 'ப்ருந்தாரண்ய ஷேத்ரம்' என்றழைக்கப்படும் திருவல்லிக்கேணியில் தான். தந்தையார் என் சிறு வயதிலேயே தவறி விட்டதால், என் அம்மா வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவானது. அப்போது நான் 3-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கிறித்துவப் பள்ளியின் (Montessori) தலைமையாசிரியரான, மிகுந்த கனிவும் இரக்க குணமும் கொண்ட Johannes அம்மையார் என் அம்மாவை ஆசிரியை பணிக்கு வருமாறு கூறினார்கள்.

என் தாய்வழிப் பாட்டனார் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் என்பதாலோ என்னவோ, எனக்கு படிப்பில் ஈடுபாடு இயற்கையாகவே அமைந்திருந்தது. சிலேட்டில் 'a b c d' சரியாக எழுத வரவில்லையென பலமுறை அழுதிருப்பதாக, என் முதல் வகுப்பு ஆசிரியை, காலஞ்சென்ற திருமதி ராஜி, பிற்காலத்தில் கூறி சிரித்திருக்கிறார்கள்! நான் கல்வியார்வத்துடனும், அமைதியான குணமுடனும் காணப்பட்டதால், Johannes அவர்களுக்கு என் மேல் தனிப்பட்ட பிரியம் இருந்தது. கருணையும் கண்டிப்பும் ஒரு சேர அமைந்த அவரிடம் எனக்குப் பிடித்தவை அவரின் முத்து முத்தான கையெழுத்தும், ஆங்கில இலக்கண அறிவும் தான். என் நினைவில் என்றும் வாழும், என் முதல் ஆசான் அவரே ஆவார்.

நான் (ஆறாம் வகுப்பிலிருந்து) இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்த காலத்திலும், அவரை மரியாதை நிமித்தம் அவ்வப்போது பார்க்கச் செல்வேன். ஒவ்வொரு முறையும் தவறாமல் என் படிப்பைப் பற்றி விசாரிப்பார். அவர் பள்ளிக்கு வரும் பெற்றோர்களிடம் நான் அவர் மாணவன் என்று பெருமிதத்துடன் கூறுவார். தேர்வு சமயங்களில், கிறித்துவ முறைப்படி என்னை மண்டியிட வைத்து ஆசிர்வதித்துத் தான் அனுப்பி வைப்பார்!!! அவரின் அந்த ஆசிர்வாதம் எனக்கு வெகுவாக உதவியது என்று திடமாக நம்பினேன். 1981-இல் அவர் எனக்களித்த நல்லொழுக்கச் சான்றிதழை ஒரு பொக்கிஷம் போல் இன்று வரை பாதுகாத்து வருகிறேன்.

ஒன்று மட்டும் நிச்சயம். அக்காலத்தில் நான் சந்தித்த, தங்கள் பணியை சமூகத் தொண்டாக கருதிய, பள்ளி ஆசிரியர்களைப் போல், தற்காலத்து அன்யோன்யமற்ற அவசர உலகில் வாழும் ஆசிரியர்கள் இல்லை என்றே தோன்றுகிறது. Johannes அவர்கள் இறக்கும் தறுவாயில் என்னை பார்க்க விரும்பினார். நான் செல்வதற்குள், அவர் உயிர் பிரிந்தது என்னுடைய துர்பாக்கியம்.

என் பெண்ணும் நான் பாடம் பயின்ற Montessori பள்ளியில் தான் தன் கல்வியைத் தொடங்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை அப்போது தலைமையாசிரியராக இருந்த Johannes அவர்களின் மகளிடம் கூறியபோது, அவர் பெரு மகிழ்ச்சி அடைந்தார். சிறிது காலம் அங்கு படித்த என் மகள், இப்போது வேறு பள்ளியில் கல்வி கற்கிறாள். என் இரண்டாவது பெண்ணுக்குத் தான் அந்த கொடுப்பினை இல்லை போலும்!

Johannes அவர்களின் மகளும் சில வருடங்களுக்கு முன் இறந்து போனதால், பள்ளி மூடப்பட்டு, அக்கட்டிடமும் இடிக்கப்பட்டு, அங்கே ஒரு காபிப்பொடி கடையும், ஒரு சிறு Super Market-உம் தோன்றி விட்டன! என் பள்ளி இருந்த இடத்தை கடந்து செல்லும் போதெல்லாம், நெஞ்சு சற்று கனத்துத் தான் போகிறது! நான் படித்த பள்ளி, இலைகளும் மலர்களும் பழங்களும் கூடிய உயிரோட்டமிக்க ஒரு அழகான சிறு மரம் போன்றதென்றால், தற்போதைய கட்டிடம் கிளைகள் தவிர வேறெதுவும் இல்லாத உயிரற்ற ஒரு சூனிய மரமாகவே எனக்கு காட்சியளிக்கிறது. பள்ளி இருந்த காலத்தில், அதன் முகப்பையாவது ஒரு புகைப்படமாக எடுத்து வைத்திருக்கலாம் என்று இப்போது நினைத்து என்ன பயன்? வாழ்வில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்றாலும் கூட, சில மாற்றங்களை மனதளவில் நம்மால் ஏற்க முடிவதில்லை!

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, May 29, 2006

GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 4

கடிதத்தின் மூன்றாம் பகுதியை படித்து விட்டுத் தொடரவும் !

தோழனுக்கு ஒரு கடிதம் --- பகுதி 4
***************************************


என் அன்புக்குரிய ப்ரீதம்,

பொறியியற் படிப்பு முடிந்ததும், உனக்கு பெங்களூரில் நல்ல வேலை கிடைத்தது. நான் சில மாதங்கள் மும்பையில் ஒரு நுண்ணணுவியல் பத்திரிகையில் பணி புரிந்து விட்டு பின் பெங்களூரில் ஒரு பொது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். மீண்டும், அரட்டை, சினிமா, ஊர் சுற்றல் என்று மாலைப் பொழுதுகளை ஜாலியாகக் கழித்தோம். கல்லூரிக் காலத்தில், வந்தனாவைப் பற்றிய உனது உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டாத நீ, ஓர் இரவுக் காட்சி பார்த்து விட்டு திரும்பும்போது, ஓர் இந்திரா நகர் பூங்காவில் அவள் மேல் உனக்கிருந்த காதலை ஒப்புக் கொண்டாய். அக்காதலை சில காரணங்களுக்காக அவள் நிராகரித்ததையும் சுயபச்சாதாபத்துடன் கூறினாய். அந்த நேரம் ஒரு புதியவனாக நீ எனக்குத் தோன்றினாய்! அந்த புறக்கணிப்பு உன்னிடம் ஒரு பக்குவத்தை ஏற்படுத்தியிருந்ததையும் என்னால் உணர முடிந்தது.

அந்த இந்திரா நகர் பூங்காவில், பெங்களூரின் குளிரிரவுப் பொழுதுகளில், கலீல் கிப்ரான் கவிதைகள், உன் ஆன்மீகத் தேடல்கள், எதிர்கால லட்சியங்கள், அப்போது நீ ஈடுபட்டிருந்த மென்பொருள் உருவாக்கம் என்று பல விடயங்கள் குறித்து ஒரு வித லயிப்புடன் நீ பேசியதை, நேரம் போவது தெரியாமல் நான் கேட்டிருக்கிறேன்! உனக்கு நினைவிருக்கிறதா ? பிரிகேட் சாலையில் இருந்த "The Pub"-இல், பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த ஒரு வைர வியாபாரியிடமும், அவரது ஆப்பிரிக நண்பரிடமும் உன்னை நீயே அறிமுகப்படுத்திக் கொண்டு, உன் பேச்சுத்திறனை மூலதனமாக்கி, அவர்களை குடுவை குடுவையாக பீரும், நொறுக்குத் தீனியும் வாங்கித் தர வைத்த உன் சாமர்த்தியத்தை என்னவென்று சொல்ல !

நான் ONGC-யில் வேலை நிமித்தம் மீண்டும் மும்பை சென்று விட்ட பின், ஒரு சில அற்புதமான கடிதங்களை எனக்கு நீ எழுதியிருக்கிறாய். அவை, இன்னும் என் வசம் பத்திரமாகவே உள்ளன. உன் சுபாவத்திற்கு தகுந்தாற் போல், பெங்களூர் வேலையை உதறி விட்டு, சென்னையில் ஒரு அயல்நாட்டு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தாய். பணி நிமித்தம் நீ ஒரு தடவை (1987) மும்பை வந்தபோது ஏற்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, உன்னை நான் இதுவரை பார்க்கவில்லை. நீ எங்கிருக்கிறாய் என்பதை நான் அறிந்தும், நமது அடுத்த சந்திப்பிற்காகக் காத்திருப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை எனக்கு !

உன்னைப் பற்றி சில விடயங்கள் நண்பர்கள் மூலம் தெரியப் பெற்றேன். புட்டபர்த்தி சாய்பாபாவிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட நீ, புட்டபர்த்தியில் அமைந்துள்ள 'Sai Institute of Technology' யில் விரிவுரையாளராக வேலைக்குச் சேர்ந்தது பற்றியும், சாய்பாபாவின் நேர்காணலுக்காக பல லட்சம் பேர் காத்திருந்த வேளையில், அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க, அவரிடம் பேச உனக்களிக்கப்பட்ட சலுகை குறித்தும், அங்கு ஆன்மீகத்தில் உன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ஒரு யோகி போல் வாழ்ந்தது குறித்தும் கேள்விப் பட்டேன்.

நீ எனக்குப் பரிசாக வழங்கிய ஒரு புத்தகத்தில் நீ எழுதிக் கொடுத்த "BETWEEN HERE AND THERE, IS ETERNITY, BETWEEN NOW AND THEN, IS INFINITY!" என்ற அற்புதமான வாசகத்தை நினைவு கூர்ந்து இந்த மடலை நிறைவு செய்கிறேன்!

என்றென்றும் அன்புடன்
பாலா
**********************************

EPILOGUE:

நண்பன் நாராயணன் IES-இல் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று தொலைப்பேசித் துறையில் சீனியர் டிவிஷனல் பொறியாளராக உயர்ந்து, பின் அதை விடுத்து, தற்போது பூனாவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறான். ஆனால், பேச்சில், அடக்கத்தில் அதே பழைய 'நாரி' தான்!

'மொட்டை' ஷியாம், ஓமானில் சில ஆண்டுகள் வேலை செய்து விட்டு, தற்போது Bahwan's குரூப்பைச் சார்ந்த ஒரு மென்பொருள் நிறுவனத்தின் சென்னைக் கிளையில் உயர் பதவியில் இருக்கிறான். இன்றும் சனி ஞாயிறுகளில் கிரிக்கெட் விளையாடுகிறான்!

'Badoo' என்கிற செல்வராஜ் சிறிது காலம் HCL-இல் பணி புரிந்து விட்டு, கடந்த 10 வருடங்களாக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் தன் மனைவியோடும் (அவனது மாமா பெண் தான்!) இரு மகள்களோடும் வாசம் செய்கிறான்! ஒரு பெரிய அமெரிக்க நிறுவனத்தில் டைரக்டராக வேலை!

GS என்கிற ஸ்ரீராம் மும்பையில் சில வருடங்கள் டாடா எலெக்ட்ரிக் நிறுவனத்தில் வேலை செய்து விட்டு பின்னர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று MS படித்து முடித்து, நல்ல வேலை கிடைத்து, திருமணமாகி, மனைவியுடனும், மகனுடனும், முன்போலவே நண்பர்களிடம் 'கடி' ஜோக்குகள் சொல்லிக் கொண்டு, டென்வரில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான்.

'Vasco' என்கிற வசந்த்குமார், IIM, கல்கத்தாவில் மேலாண்மை படிப்பை முடித்து, பின் NIIT-இல் பணி புரிந்தபோது ஒரு முறை சிறந்த மேலாளருக்கான விருது வென்று, பணி நிமித்தம் பல வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் பெற்று, தற்போது கலிபோர்னியாவில் 'ORACLE' நிறுவனத்தில் ப்ராஜெக்ட் டைரக்டராக இருக்கிறான். தலைமுடியில் முக்கால்வாசி இழந்திருந்தாலும், குணத்தில் அதே பழைய வசந்த் தான்!

'ராம்ஸ்' என்கிற ராமச்சந்திரன் சிறிது காலம் ISRO நிறுவனத்தில் வேலை செய்து விட்டு, MS படிக்க அமெரிக்கா சென்றதிற்கு பின்னால் அவனுடன் தொடர்பு இல்லை. அவன் ஹிப்பி வாழ்க்கை வாழ்வதாக நண்பன் ஒருவன் மூலம் கேள்விப் பட்டேன்.

எங்களுக்கு வகுப்பெடுத்த LP மேடம் இப்போது GCT கல்லூரியில் நுண்ணணுவியல் துறைக்கு தலைவராக உயர்ந்துள்ளார்!

இறுதியாக, எனது இந்த மிக நீண்ட கடிதத்தின் நாயகனான, என்னுயிர் சிநேகிதன் ப்ரீதம் இன்று உயிருடன் இல்லை! எங்களது கடைசி மும்பை சந்திப்பு (1987) நிகழ்ந்து பல மாதங்களுக்குப் பிறகு நான் சென்னைக்கு விடுமுறைக்காக வந்தேன். அவன் ஒரு மாதத்திற்கு முன் இறந்து விட்ட செய்தியை Obituary-யில் பார்த்த எனக்கு பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டது! நானும் ஷியாமும் அவன் தாயாரை சந்தித்துப் பேசியபோது, பெங்களூர் ஒயிட்·பீல்ட் அருகே ஒரு வேனில் பயணம் செய்தபோது ஏற்பட்ட விபத்தில், சம்பவ இடத்திலேயே ப்ரீதம் உயிரிழந்ததை அவர் கண்ணீருடன் கூறினார். நெற்றியின் பக்கவாட்டில் கூர்மையான ஏதோ ஒன்று துளைத்த ரத்தச் சுவடோடும், வலியை வென்ற மெல்லிய புன்னகையைத் தேக்கிய உதடுகளோடும் ப்ரீதம் இறந்து போனதையும், அதே வேனில் பயணம் செய்த தான் காயங்களோடு உயிர் பிழைத்ததையும் சொல்லி அவர் கலங்கியபோது, கடவுள் மீதே அசாத்திய கோபம் வந்தது. ப்ரீதம் தனது டைரியில் கடைசியாகப் பதித்திருந்த, "THIS LIFE IS LIKE WALKING ON A RAZOR'S EDGE!" என்ற வாசகம் என் நெஞ்சில் ஒரு வடு போல் தங்கி விட்டது.

ப்ரீதம் இறந்த சில மாதங்களில், மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற வந்தனாவும், ஒரு கோரமான கார் விபத்தில் இறந்து போனதை என்னவென்று சொல்வது !

(முற்றும்)

தோழனுக்கு ஒரு கடிதம் --- Part III

இப்பதிவை மீள்பதிவு செய்வதற்கு காரணங்கள் இரண்டு:

1. கடிதத்தின் இந்த மூன்றாவது பகுதியை பதித்து சில வாரங்களாகி விட்டதால், திடீரென்று இதன் இறுதிப் பகுதியை பதிக்க விரும்பவில்லை !

2. இந்த கடிதத்தின் "இறுதி அத்தியாயத்தை" இன்று மாலைக்குள் எழுதி பதித்து விடுகிறேன் !

முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளை படித்து விட்டுத் தொடரவும் !

தோழனுக்கு ஒரு கடிதம் --- பகுதி 3
****************************************

என் அன்புக்குரிய ப்ரீதம்,

கலை நிகழ்ச்சி மேடைகளில் ஏறியவுடன், ஏதோ ஒரு சக்தி உன்னை ஆட்கொண்டதை நான் உணர்ந்திருக்கிறேன். AD-APT என்று அழைக்கப்பட்ட ஒரு கலை நிகழ்ச்சி உனக்கு நினைவிருக்கிறதா ? அது, பொருட்களை வித்தியாசமாக, சுவைபட, ஒரிஜினல் விளம்பரங்களை நையாண்டி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டிய ஒரு போட்டியாகும். அதில் உன்னுடன் பங்கேற்ற நம் நண்பர்களை எண்ணிப் பார்க்கிறேன்.

நிகழ்ச்சியின் விளம்பரக் குரலாக இருந்த, சரீரத்திற்கும் சாரீரத்திற்கு சம்மந்தமே இல்லாமல் கணீரென்ற குரல் கொண்ட, கல்லூரியில் இருந்த பெண்களெல்லாம் தங்களது உடன்பிறவாச் சகோதரனாக பாவித்த, கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவனான 'நாரி' என்ற நாராயணன், "A short man with a high stature" என்ற கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தான்!

'Badoo' என்கிற செல்வராஜ் தான் எவ்வளவு அழகாக சித்திரங்கள் வரைவான்! அவன் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு குறைவிருக்காது.

'Vasco' என்கிற வசந்த்குமார், ஒரே சமயத்தில் GRE, TOEFL, GATE, CAT என்று பல தேர்வுகளையும் எதிர்கொண்டு அனைத்திலும் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று நம்மையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்!

GS என்றழைக்கப்பட்ட ஸ்ரீராம், எந்த திரைப்பட பாடலானாலும், கேள்வி ஞானத்திலேயே, அப்பாடலுக்கு அடிப்படையாக அமைந்த கர்னாடக ராகத்தை எளிதில் கண்டுபிடித்து விடுவான். அவன், விகடனின் 'மாணவர் பத்திரிகையாளராக' நம் கல்லூரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவனும் கூட !

ஒரு குழுவாக, நீங்கள் AD-APT-இல் நடித்துக் கலக்கியதை நினைத்துப் பார்த்தால், இன்றும் சிரிப்பு வருகிறது. அந்நிகழ்ச்சியில் டார்ஸான் ஏதோ ஒரு டானிக்கை சாப்பிட்டதால் அவனுக்கு உண்டான உடல் வலிமைக்கு சான்றாக வரும், "When Tarzan farts, the whole jungle stinks" என்ற ஒரு வாசகத்தை கேட்டு அன்று கல்லூரி அரங்கமே அதிர்ந்தது !!!


மற்றொரு கலை நிகழ்ச்சியான MOCK PRESS-இல் (ஒரு பிரபலமான நபரைப் போல் ஒருவர் வேடமேற்று சீனியர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய ஒரு பத்திரிகையாளர் குழு கேட்கும் கேள்விகளுக்கு திறமையாக பதிலளிக்கும் நிகழ்ச்சி அது!) நீ ஒரு முறை கர்னல் கடா·பியாகவும், மற்றொரு முறை சாத்தானாகவும் வேடமேற்று பிரமிக்கத்தக்க வகையில் நடித்து, கேள்விகளை திறமையாக எதிர் கொண்டு அசத்தினாய். நீயும், நடிகர் சத்யராஜ் போலவே நெகடிவ் கேரக்டர்களில் பரிமளித்தவன்! சாத்தானாக நீ மேடையேறியவுடன், பார்வையாளர் மத்தியில் சாத்தானின் பக்தன் போல் நீ செட்டப் செய்திருந்த நண்பன் பாடலிநாதன் கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு, மேடையை நோக்கி விரைந்து உனக்கு சூடம் காட்டி, "ஓ சாத்தானே, எனக்கு அருள் பாலியுங்கள்!" என்று உன்னைப் பணிந்தது பயங்கர கலகலப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து நீ மேடையில் செய்த அட்டகாசங்கள் சொல்லி மாளாது!

பத்திரிகையாளர் குழுவில் இடம் பெற்ற வேதியியல் ஆசிரியரின் தலையில் நீ கை வைத்து, " Satan bless you!" என்று ஆசீர்வதித்து அவரை மிரள வைத்தாய். அது மட்டுமா, பார்வையாளர் மத்தியில் உட்கார்ந்திருந்த ஜுனியர் மாணவி வந்தனா (அழகும், திறமையும், பணமும் ஒரு சேர அமையப் பெற்றவரிடம் காணப்படும் ஒரு மெல்லிய அகந்தை அவளிடமும் இருந்தது. உனக்கும் கொஞ்சம் ஈகோ உண்டல்லவா? அதனால், you had a love-hate relationship with her) பக்கம் திரும்பி காமப்பார்வையுடன் (உன் நடிப்பைத் தான் சொல்கிறேன், கோபிக்காதே!), "Hi, beauty! What is your name ?" என்று வினவினாய்! பதில் சொல்ல எழுந்த வந்தனாவை, "You are ugly! I was asking the girl next to you!" என்று இடைமறித்து எரிச்சல் கொள்ள வைத்தாய்.

நிகழ்ச்சி முடிந்ததும், வந்தனா எங்களிடம், "He was a bit too much on stage, today!" என்று பொரிந்ததையும், அதற்கு வேதியியல் ஆசிரியர், "No, Preetham was actually three-much, today!" என்று நகைச்சுவையாகக் கூறியதையும், உன் நடிப்புக்குக் கிட்டிய பாராட்டாகவே நான் பார்க்கிறேன்!

நாம் மூன்றாமாண்டு பயில்கையில், இலங்கைப் பிரச்சினையை முன்னிறுத்தி தமிழ்நாட்டுக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். அதனால், நம் கல்லூரி நிர்வாகம் விடுதிகளிலிருந்து மாணவர்களை வெளியேற்றியது. சென்னைக்குச் செல்ல விரும்பாமல், நான், நீ, துரைராஜ், ராம்ஸ் என்கிற ராமச்சந்திரன் ஆகியோர், நண்பன் செல்வராஜுடன் குன்னூருக்கு மேல் அமைந்துள்ள பேலிதளா (Belidala) என்ற அவனது சொந்த கிராமத்துக்கு பயணப்பட்டது உனக்கு நிச்சயம் ஞாபகம் இருக்கும்.

அப்போது நாம் மேற்கொண்ட வனப்பயணம் (நானும், ராம்ஸ¤ம் சேற்று மணலில் வழுக்கி, ஓர் ஐம்பதடி கீழிருந்த பாறைப் பரப்பில் விழ இருந்தோமே!), நாம் கலந்து கொண்ட செல்வராஜ் (படுகர் இன) இல்லத் திருமணம், நமக்கு அங்கு கிடைத்த உற்சாகமான மரிதையான வரவேற்பு, சைட் அடித்த செல்வாவின் அழகான மாமா/அத்தைப் பெண்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்பில் உற்சாக பானங்கள் என்று எல்லாம் சேர்ந்து அது வாழ்வில் நாம் மறக்க முடியாத ஒரு பயணம் ஆனது, இல்லையா !

பொறியியற் படிப்பு முடிந்து, நாம் இருவரும் பெங்களூரில் சிறிது காலம் ஒன்றாகச் சுற்றினோமே, அந்த நாட்களையும் என்னால் மறக்க இயலாது !

என்றென்றும் அன்புடன்
பாலா


--- Concluding Part of this letter will be published today evening.

Saturday, May 06, 2006

GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 3

முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளை படித்து விட்டுத் தொடரவும் !

தோழனுக்கு ஒரு கடிதம் --- பகுதி 3
****************************************


என் அன்புக்குரிய ப்ரீதம்,

கலை நிகழ்ச்சி மேடைகளில் ஏறியவுடன், ஏதோ ஒரு சக்தி உன்னை ஆட்கொண்டதை நான் உணர்ந்திருக்கிறேன். AD-APT என்று அழைக்கப்பட்ட ஒரு கலை நிகழ்ச்சி உனக்கு நினைவிருக்கிறதா ? அது, பொருட்களை வித்தியாசமாக, சுவைபட, ஒரிஜினல் விளம்பரங்களை நையாண்டி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டிய ஒரு போட்டியாகும். அதில் உன்னுடன் பங்கேற்ற நம் நண்பர்களை எண்ணிப் பார்க்கிறேன்.

நிகழ்ச்சியின் விளம்பரக் குரலாக இருந்த, சரீரத்திற்கும் சாரீரத்திற்கு சம்மந்தமே இல்லாமல் கணீரென்ற குரல் கொண்ட, கல்லூரியில் இருந்த பெண்களெல்லாம் தங்களது உடன்பிறவாச் சகோதரனாக பாவித்த, கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவனான 'நாரி' என்ற நாராயணன், "A short man with a high stature" என்ற கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தான்!

'Badoo' என்கிற செல்வராஜ் தான் எவ்வளவு அழகாக சித்திரங்கள் வரைவான்! அவன் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு குறைவிருக்காது.

'Vasco' என்கிற வசந்த்குமார், ஒரே சமயத்தில் GRE, TOEFL, GATE, CAT என்று பல தேர்வுகளையும் எதிர்கொண்டு அனைத்திலும் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று நம்மையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்!

GS என்றழைக்கப்பட்ட ஸ்ரீராம், எந்த திரைப்பட பாடலானாலும், கேள்வி ஞானத்திலேயே, அப்பாடலுக்கு அடிப்படையாக அமைந்த கர்னாடக ராகத்தை எளிதில் கண்டுபிடித்து விடுவான். அவன், விகடனின் 'மாணவர் பத்திரிகையாளராக' நம் கல்லூரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவனும் கூட !

ஒரு குழுவாக, நீங்கள் AD-APT-இல் நடித்துக் கலக்கியதை நினைத்துப் பார்த்தால், இன்றும் சிரிப்பு வருகிறது. அந்நிகழ்ச்சியில் டார்ஸான் ஏதோ ஒரு டானிக்கை சாப்பிட்டதால் அவனுக்கு உண்டான உடல் வலிமைக்கு சான்றாக வரும், "When Tarzan farts, the whole jungle stinks" என்ற ஒரு வாசகத்தை கேட்டு அன்று கல்லூரி அரங்கமே அதிர்ந்தது !!!


மற்றொரு கலை நிகழ்ச்சியான MOCK PRESS-இல் (ஒரு பிரபலமான நபரைப் போல் ஒருவர் வேடமேற்று சீனியர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய ஒரு பத்திரிகையாளர் குழு கேட்கும் கேள்விகளுக்கு திறமையாக பதிலளிக்கும் நிகழ்ச்சி அது!) நீ ஒரு முறை கர்னல் கடா·பியாகவும், மற்றொரு முறை சாத்தானாகவும் வேடமேற்று பிரமிக்கத்தக்க வகையில் நடித்து, கேள்விகளை திறமையாக எதிர் கொண்டு அசத்தினாய். நீயும், நடிகர் சத்யராஜ் போலவே நெகடிவ் கேரக்டர்களில் பரிமளித்தவன்! சாத்தானாக நீ மேடையேறியவுடன், பார்வையாளர் மத்தியில் சாத்தானின் பக்தன் போல் நீ செட்டப் செய்திருந்த நண்பன் பாடலிநாதன் கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு, மேடையை நோக்கி விரைந்து உனக்கு சூடம் காட்டி, "ஓ சாத்தானே, எனக்கு அருள் பாலியுங்கள்!" என்று உன்னைப் பணிந்தது பயங்கர கலகலப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து நீ மேடையில் செய்த அட்டகாசங்கள் சொல்லி மாளாது!

பத்திரிகையாளர் குழுவில் இடம் பெற்ற வேதியியல் ஆசிரியரின் தலையில் நீ கை வைத்து, " Satan bless you!" என்று ஆசீர்வதித்து அவரை மிரள வைத்தாய். அது மட்டுமா, பார்வையாளர் மத்தியில் உட்கார்ந்திருந்த ஜுனியர் மாணவி வந்தனா (அழகும், திறமையும், பணமும் ஒரு சேர அமையப் பெற்றவரிடம் காணப்படும் ஒரு மெல்லிய அகந்தை அவளிடமும் இருந்தது. உனக்கும் கொஞ்சம் ஈகோ உண்டல்லவா? அதனால், you had a love-hate relationship with her) பக்கம் திரும்பி காமப்பார்வையுடன் (உன் நடிப்பைத் தான் சொல்கிறேன், கோபிக்காதே!), "Hi, beauty! What is your name ?" என்று வினவினாய்! பதில் சொல்ல எழுந்த வந்தனாவை, "You are ugly! I was asking the girl next to you!" என்று இடைமறித்து எரிச்சல் கொள்ள வைத்தாய்.

நிகழ்ச்சி முடிந்ததும், வந்தனா எங்களிடம், "He was a bit too much on stage, today!" என்று பொரிந்ததையும், அதற்கு வேதியியல் ஆசிரியர், "No, Preetham was actually three-much, today!" என்று நகைச்சுவையாகக் கூறியதையும், உன் நடிப்புக்குக் கிட்டிய பாராட்டாகவே நான் பார்க்கிறேன்!

நாம் மூன்றாமாண்டு பயில்கையில், இலங்கைப் பிரச்சினையை முன்னிறுத்தி தமிழ்நாட்டுக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். அதனால், நம் கல்லூரி நிர்வாகம் விடுதிகளிலிருந்து மாணவர்களை வெளியேற்றியது. சென்னைக்குச் செல்ல விரும்பாமல், நான், நீ, துரைராஜ், ராம்ஸ் என்கிற ராமச்சந்திரன் ஆகியோர், நண்பன் செல்வராஜுடன் குன்னூருக்கு மேல் அமைந்துள்ள பேலிதளா (Belidala) என்ற அவனது சொந்த கிராமத்துக்கு பயணப்பட்டது உனக்கு நிச்சயம் ஞாபகம் இருக்கும்.

அப்போது நாம் மேற்கொண்ட வனப்பயணம் (நானும், ராம்ஸ¤ம் சேற்று மணலில் வழுக்கி, ஓர் ஐம்பதடி கீழிருந்த பாறைப் பரப்பில் விழ இருந்தோமே!), நாம் கலந்து கொண்ட செல்வராஜ் (படுகர் இன) இல்லத் திருமணம், நமக்கு அங்கு கிடைத்த உற்சாகமான மரிதையான வரவேற்பு, சைட் அடித்த செல்வாவின் அழகான மாமா/அத்தைப் பெண்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்பில் உற்சாக பானங்கள் என்று எல்லாம் சேர்ந்து அது வாழ்வில் நாம் மறக்க முடியாத ஒரு பயணம் ஆனது, இல்லையா !

பொறியியற் படிப்பு முடிந்து, நாம் இருவரும் பெங்களூரில் சிறிது காலம் ஒன்றாகச் சுற்றினோமே, அந்த நாட்களையும் என்னால் மறக்க இயலாது !

என்றென்றும் அன்புடன்
பாலா


--- மடல் இன்னும் விரியும்!

Saturday, April 15, 2006

GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 2

முதல் பகுதியை படித்து விட்டுத் தொடரவும் !

தோழனுக்கு ஒரு கடிதம் ! - Part II
****************************************

என் அன்புக்குரிய ப்ரீதம்,

முதலாண்டில் நாம் பயின்ற நேரம், ரேகிங் அதிகமாகவே இருந்தது. கிண்டல், கேலி என்பவை போக, பல சமயங்களில் சீனியர் மாணவர்கள் அடி உதையும் நமக்கு வழங்கினர். மேலும், நமது அறைகளில் இரவு எட்டு மணிக்கு மேல் விளக்கெரிவதற்கு தடா போட்டிருந்தனர். தவறி விளக்கெறிந்தால், ஆர்ப்பாட்டமாக கல் வீசி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வந்தனர். அதற்கெல்லாம் அசராமல், நம் அறை ஜன்னலுக்கு இரு கெட்டியான போர்வைகளை பாதுகாப்பு அரணாக்கி, நடு இரவு வரை துணிச்சலாக விளக்கை எரிய விட்டு, நீ ஏதாவது படித்துக் கொண்டிருப்பாய். நம் அறையைத் தவிர்த்துப் பார்த்தால், விடுதியே இருளில் மூழ்கியிருக்கும். இதனால், கடுப்பான சீனியர்கள் தொடர்ந்து கல் வீசியதில், நம் அறையின் ஜன்னல் கண்ணாடியை மொத்தமாக இழந்தது! இரு வாரங்களில் கல் வீச்சும் ஒய்ந்து போனது! அதனால், எட்டு மணிக்கு மேல் படிக்க விரும்பிய 'காந்தி' வகை மாணவ நண்பர்கள், நம் அறையை நோக்கி விட்டில் பூச்சிகள் போல் படையெடுத்து நம் உறக்கத்தை கெடுத்தது தான் மிச்சம்!

அது போலவே, சீனியர்களின் அடி உதையை நீ எதிர் கொண்ட விதமும் அபாரமானது. நம் சக மாணவர்கள் சீனியர்களுக்கு அஞ்சி, 6 மணிக்கு மேல் விடுதியை விட்டு வெளியே வர மாட்டார்கள். நீயோ (நடுக்கத்தை வெளிக்காட்டி கொள்ளாத என்னையும் இழுத்துக் கொண்டு!) வேண்டுமென்றே கல்லூரி வளாகத்தில் அங்குமிங்கும் நடை பயில்வாய். அதனால், சீனியர் மாணவர்களின் பார்வையில் விழுந்து, நமக்கு பல தடவை அடி உதை கிடைத்தது. ஆனால், நீ நினைத்தது போலவே, ஒரு கட்டத்தில், அவர்களுக்கே அது அலுத்துப்போய், நம்மை பிடித்துப்போய், சீக்கிரமே சீனியர்களில் பலர் நமக்கு காட்·பாதர்களாகி விட்டனர். இதனால் நம் காட்டில் நல்ல மழை!

சீனியர் மாணவர்களிடமிருந்து பழைய பாடப் புத்தகங்கள் நமக்கு கிடைத்தன. அவ்வப்போது ஹோட்டலில் ஓசிச் சாப்பாடு, திரைப்பட இரவுக்காட்சிகளுக்கு விசேஷ அழைப்புகள், சீனியர் விடுதிகளுக்கு தங்கு தடையின்றி சென்று வர அனுமதி, சீனியர் மாணவிகளுடன் கடலை என்று பல அனுகூலங்கள் வாய்க்கப் பெற்றன. ஒரு முறை, ராகம் (தானம், பல்லவி!) திரையரங்கில் 'முந்தானை முடிச்சு' பார்த்து விட்டு, சீனியர்கள் சிலரோடு நாம் ஜட்கா வண்டியில் விடுதிக்கு திரும்பியது உனக்கும் மறந்திருக்காது என்று எண்ணுகிறேன்!

நீ சற்று வசதியான குடும்பத்தில் பிறந்தவன். மாதத்தின் முதல் தேதிகளில் உன் வீட்டிலிருந்து செலவுக்கு மணியார்டரில் பணம் வந்தவுடன் நீ குபேரனாக உருவெடுப்பாய். நண்பர்கள் எங்களுக்கும் குஷி தான்! பாரி வள்ளலைப் போல் எங்களை அரவணைத்து, சினிமா, ஹோட்டல் என்று வற்புறுத்தி கூட்டிச் சென்று செலவு செய்வாயே! அதனால், மாதத்தின் கடைசி பத்து நாட்களில், டீ/பன் வாங்கக் கூட கையில் காசில்லாமல் குசேலன் போல் காட்சி அளிப்பாய். உன் முகராசியோ என்னவோ, யாராவது ஒருவர் கிருஷ்ணனாக மாறி, அந்த சமயங்களில் உன் தேவைகளை பூர்த்தி செய்வதை நான் பல முறை பார்த்திருக்கிறேன். ப்ரீதம் என்று பெயர் கொண்டதாலோ என்னவோ, கல்லூரியில் பலருக்கும் நீ பிரியமானவனாகத் திகழ்ந்தாய்!

உன்னுடனும், ஷியாமுடனும் பலமுறை சென்றுண்ட ஆர்.எஸ்.புரம் அன்னப்பூர்ணா உணவகமும்,
நாம் தேர்வு சயமங்களில் விஜயம் செய்த, வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்த "அக்ரி" வினாயகர் கோயிலும்,
நாம் ஆங்கிலத் திரைப்படங்கள் கண்டு களித்த சென்ட்ரல் திரையரங்கமும்,
மாலை நேரங்களில் உற்சாகமாக அரட்டை அடித்தபடி, நாம் தேங்காய் பன்னும் தேநீரும் சாப்பிட்ட, தடாகம் சாலைச் சந்திப்பில் அமைந்த டீக்கடையும்
என் ஞாபகத்தில் நினைவுச் சின்னங்கள் போல் குடியேறி விட்டன ! அதே போல், அன்னப்பூர்ணா உணவகத்து basement-இல் இருந்த 'சுகப்ரியா' Bar-யையும் நீ மறந்திருக்க மாட்டாய் தானே ;-)

சென்ட்ரல் திரையரங்கில், "History of the World - I" பார்த்து ரசித்ததும்,
ஸ்ரீவள்ளி டாக்கீஸில் தரையில் அமர்ந்து "கொக்கரக்கோ" படம் பார்த்ததும்,
வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு வேகு வேகென்று மிதித்து மருதமலை கோயில் சென்றதும்,
கொஞ்சமாக பீர் அருந்தி விட்டு நீயும் ஷியாமும் 'கோயில் யானை' சந்திரசேகரையும், 'பத்து' என்னும் பத்மநாபனையும் கலாய்த்ததும்,
எனக்கு சாருவிடம் ஒருவித ஈர்ப்பு இருப்பதாக (கொஞ்சம் இருந்தது!) எனக்குத் தெரியாமல் அவளிடம் சொன்னதில் அவள் என்னைப் பார்க்கும்போதெல்லாம் விநோதமாக நடந்து கொண்டதும்,
ஷியாமுடன் கட்டிய ஒரு பந்தயத்திற்காக, அறிமுகமில்லாத மிக அழகான முதலாண்டு மாணவி (பேர் நினைவிலில்லை!) ஒருத்தியிடம் சென்று, " I love you ! I will wait for your reply till tomorrow!" என்று அவளை அதிர்ச்சியில் உறைய விட்டு விடுவிடுவென்று திரும்பி வந்ததும்,
LP மேடம் வகுப்புகளில் attendance எடுக்கும்போதெல்லாம், "யெஸ், மதாம்!" (பிரெஞ்சில் மேடம் என்பதை 'மதாம்' என்பார்கள்) என்று வெறுப்பேற்றியதும்
மறக்கக்கூடிய விஷயங்களா, நண்பா !

உன் கூடப் பிறந்தவர் யாரும் இல்லாததால், தேர்வுக்கு முன் வரும் 'படிப்பு விடுமுறையில்' முக்கால்வாசி நேரத்தை சென்னையில் என் வீட்டிலேயே கழிப்பாய். என் அம்மா, பாட்டி, தம்பி, தமக்கை ஆகிய அனைவருக்கும் உன் மேல் மிகுந்த அன்பு உண்டு. அதுவும் என் தம்பிக்கு அக்காலத்தில் நீ ஆதர்ச நாயகனாக திகழ்ந்தாய்! என் குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து உண்ணும் (உன் வீட்டில் கிடைக்காத) வாய்ப்பிற்காக, எங்கள் வீட்டின் எளிமையான உணவைக் கூட மிகுந்த மகிழ்ச்சியோடு நீ ரசித்து உண்டதை இன்று எண்ணிப் பார்க்கையில், கண்ணில் நீர் திரையிடுகிறது, நண்பா!

கல்லூரி கலை நிகழ்ச்சி மேடைகளில் நீ பண்ணிய கலாட்டக்களை நமது கல்லூரித் தோழர்கள் இன்றும் மறக்கவில்லை!

என்றென்றும் அன்புடன்
பாலா


--- மடல் இன்னும் விரியும்!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails